பள்ளிக்கூடங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்

குழு விளையாட்டு என்றால் கிரிக்கெட் மீதும், 2 பேர் விளையாடும் விளையாட்டு என்றால் செஸ் மீதும்தான் மோகம் இருக்கிறது.

Update: 2024-08-27 00:50 GMT

சென்னை,

இந்தியா அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி கொண்டு இருந்தாலும், விளையாட்டுத்துறையில் எல்லோரும் எதிர்பார்க்கும் வளர்ச்சி இல்லை. சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை மற்ற விளையாட்டுகளில் பெற முடியவில்லை. காரணம் மக்களிடமும் கிரிக்கெட்டுக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது. 11 சிறுவர்கள் சேர்ந்துவிட்டால் உடனே ஒரு கிரிக்கெட் மட்டையை தூக்கிக் கொண்டு விளையாட சென்றுவிடுகிறார்கள். இதுபோல மற்ற விளையாட்டுகள் மீது இளம் தலைமுறைக்கு ஆர்வம் இல்லை. குழு விளையாட்டு என்றால் கிரிக்கெட் மீதும், 2 பேர் விளையாடும் விளையாட்டு என்றால் செஸ் மீதும்தான் மோகம் இருக்கிறது. வெளியே போய் விளையாடுவது என்றால் கிரிக்கெட் என்றும், வீட்டுக்குள் இருந்தால் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது என்பதும்தான் சிறுவர்களின் வாழ்க்கை முறையாகிவிட்டது. இதனால்தான் விளையாட்டு போட்டிகளில் உலக அரங்கில் இந்தியா ஜொலிக்க முடியவில்லை. அமெரிக்காவும், சீனாவும் கோலோச்சுகிறது. ஒலிம்பிக் பதக்க பட்டியலைப் பார்த்தால் நம்மை விட சிறிய நாடுகள் கூட முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கூட பதக்கம் பெறவில்லை.

இந்தநிலையை மாற்றவேண்டுமென்றால் பள்ளிக்கூட அளவிலேயே சீனா போல உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அந்த வயதிலேயே அவர்களுக்கு விளையாட்டில் ஒரு ஆர்வம் பிறக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்கள் மிகப்பெரிய விளையாட்டு வீரர்களாக உருவாக முடியும். எனவே தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் விளையாட்டு வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். படிப்பை பொறுத்தமட்டில், பிளஸ்-2 முடித்த பிறகுதான் அவர்கள் எந்த துறையை நோக்கி பயணிக்கப் போகிறார்கள்? என்ற வகையில் அதற்கான படிப்பை தேர்வு செய்ய முடியும். ஆனால் விளையாட்டைப் பொறுத்தவரையில், பிஞ்சு வயதிலேயே அவர்களுக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற பயிற்சிகளை வழங்க முடியும்.

இதற்கு உடற்கல்வி ஆசிரியர்களின் பங்கு மிகவும் மகத்தானது. ஆனால் இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்த வகுப்புகளில் மற்ற பாடங்களை நடத்தும் வழக்கம் அதிகரித்துவிட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கூட உடற்கல்வி வகுப்பில் மாணவர்களை மைதானத்தில் போய் விளையாட விடவேண்டும், அவர்களை வகுப்பு அறையில் வைத்துக்கொண்டு மற்ற பாடங்களை நடத்தக்கூடாது என்று அடிக்கடி பேசி வருகிறார்.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள கல்வித்துறையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைத்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. மொத்தம் உள்ள 5,777 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில், 477 பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் கூட இல்லை. மேலும் ஏற்கனவே 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதாசாரத்தை, 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்று இப்போது மாற்றப்பட்டு இருக்கிறது.

அதிலும் உடற்கல்வி இயக்குனர் பணியிடம் 700 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் அனுமதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது நிச்சயமாக விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களை பெரிதும் பாதிக்கும். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்குக்கூட விளையாடும் வாய்ப்பை பறித்துவிடும். எனவே தமிழக அரசு உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடத்தை குறைக்கும் வகையில், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, மாணவர்களுக்கு விளையாட்டில் ஊக்கத்தை அளிக்கும் வகையில், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்