உயர்ந்து வரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு!

3 மாதங்களுக்கு ஒரு முறை சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி திருத்தி அமைக்கப்படுகிறது.

Update: 2024-03-29 01:09 GMT

முதுமையை யாராலும் தவிர்க்க முடியாது. எல்லோருடைய வாழ்விலும் பிற்காலங்களில் முதுமையை கடந்தே ஆகவேண்டும். ஆனால், முதுமை காலத்தில் யாரையும் சார்ந்து இருக்காமல், தள்ளாத வயதிலும் சொந்தக் காலிலேயே நிற்பதுதான் சிறப்பான வாழ்வாகும். எறும்புகூட மழைக்காலத்துக்காக சேமித்து வைப்பதுபோல, முதிர் வயதுக்காக சேமிப்பது மிகவும் அவசியமாகும். ஐக்கிய அமெரிக்க தலைவர் பென்ஜமின் பிராங்க்ளின் நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பே, "நாம் சேமித்து வைக்கும் ஒவ்வொரு ரூபாயும் நாம் புதிதாக சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்" என்று கூறியிருப்பது இன்றளவும் சேமிப்பின் அவசியத்தை பறைசாற்றுகிறது.

இந்த கால பெற்றோரும் முதிர் வயதில் பிள்ளைகளுக்கு பாரமாக இல்லாமல், தங்கள் வாழ்க்கையை கழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான், பணம் கட்டி தங்கியிருக்கும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அரசு பணியில் இருந்தவர்களுக்கு கிடைக்கும் மாதாந்திர பென்ஷனை வைத்து வயதான காலத்தில் வசதியாக வாழமுடியும். ஆனால், மற்றவர்கள் அவர்களுடைய சேமிப்பை வைத்துத்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

வயதானவர்கள் சேமிப்புக்காக தபால் நிலையத்தைத்தான் பெரிதும் சார்ந்து இருக்கிறார்கள். தபால் நிலையங்களில் 12 வகையான சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இதில் மூத்த குடிமக்களுக்கு தனி திட்டம் இருக்கிறது. இந்த சேமிப்பில், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் என்ற வரம்பு இருந்தது. கடந்த 1-4-2023 முதல் இந்த வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த சேமிப்பில் பணம் போடுவது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வசூல் கடந்த மாத தொடக்கத்தில் ரூ.90 ஆயிரம் கோடியாகும்.

கடந்த நிதி ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தில் வசூலான தொகை ரூ.37 ஆயிரம் கோடியாகத்தான் இருந்தது. இதேபோல, மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்த கூட்டுக்கணக்கில் ரூ.9 லட்சம் என்றும் வரம்பு இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த வரம்பு தனி நபருக்கு ரூ.9 லட்சம் என்றும், கணவன்-மனைவி இருவருக்குமான கூட்டு கணக்கு வரம்பு ரூ.15 லட்சம் என்றும் உயர்த்தப்பட்டது. இந்த மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் வசூலும் கடந்த நிதியாண்டு முழுவதும் ரூ.5 ஆயிரம் கோடியாக இருந்தது.

இந்த நிதியாண்டில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே ரூ.20 ஆயிரம் கோடியாக, அதாவது 4 மடங்கு உயர்ந்துள்ளது. நாளை மறுநாள் வரை இந்த நிதியாண்டுக்கான காலம் இருப்பதால், இந்த சேமிப்பு தொகை இன்னும் அதிகமாகும். ஆனால், "தாங்கள் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி முதிர்வயதுக்காக சேமித்து வைக்கும் தொகைக்கும் வருமான வரி மற்றவர்களைப்போல கட்டவேண்டிய கெடுபிடி இருக்கிறது. தங்களுக்கான வருமானவரி சலுகையை நீட்டிக்கவேண்டும். வருமான வரி பற்றிய கவலை இருக்கக்கூடாது" என்று எண்ணும் மூத்த குடிமக்கள், இத்தகைய சேமிப்புகளுக்கான வட்டி தொகையும் உயர்த்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

3 மாதங்களுக்கு ஒரு முறை சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி திருத்தி அமைக்கப்படுகிறது. அடுத்த திருத்தத்தில் மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்துவிடாமல் விலைவாசி உயர்வு, மருத்துவ செலவை கருத்தில்கொண்டு வட்டியை உயர்த்தவேண்டும் என்பது மூத்த குடிமக்களுக்கு சமுதாயம் செய்ய வேண்டிய கடமையாகும். 

Tags:    

மேலும் செய்திகள்