'நா நயம்' மிக்க கலைஞருக்கு 'நாணயம்'!

கலைஞர் எந்த பொருள் குறித்து பேசினாலும், அதில் ‘நா நயம்’ இருக்கும்.

Update: 2024-08-21 01:06 GMT

சென்னை,

தான் வாழ்ந்த 95 ஆண்டுகளில், 81 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு வழங்கியவர் என்ற பெருமையை நாட்டிலேயே பெற்ற ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதிதான். பள்ளிப் பருவமான 14 வயதிலேயே திருவாரூர் வீதிகளில், தோளில் தமிழ்க்கொடியை ஏந்திக்கொண்டு, "ஓடிவந்த இந்திப்பெண்ணே கேள், நீ தேடிவந்த கோழை நாடு இதுவல்லவே" என்று முழங்கி, தமிழ் மீது தனக்கு இருந்த பற்றை வெளிக்காட்டினார். அந்த வயதில் இருந்தே அவர், தமிழ், தமிழரின் நலன், தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை தன் முதல் நோக்கமாகக் கொண்டு, தன் வாழ்க்கை பாதையை வடிவமைத்தார். எந்த சூழ்நிலையிலும் அவர் சுயமரியாதையையும், சமூக நீதியையும் விட்டுக்கொடுத்ததே இல்லை. 5 முறை முதல்-அமைச்சராக இருந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பல சீரிய திட்டங்களை தீட்டி முத்திரை பதித்தவர்.

கலைஞர் எந்த பொருள் குறித்து பேசினாலும், அதில் 'நா நயம்' இருக்கும். அரசியல் நிர்வாகம், ஆட்சி நிர்வாகம், கலை, இலக்கியம், திரைத்துறை, இதழியல், சொற்பொழிவாளர், சிந்தனையாளர் என்று பன்முக திறமைகளுக்கு சொந்தக்காரர். மண்ணில் மறைந்தாலும் மக்கள் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதிக்கு, அவரது நூற்றாண்டில் சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசாங்கத்தின் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

இந்த நாணயத்தில் பல பெருமைகள் இருக்கின்றன. கலைஞரின் உருவத்தோடு அவர் பிறந்த ஆண்டும் நூற்றாண்டும் குறிப்பிடப்பட்டு, அவரது உயிர் மூச்சான 'தமிழ் வெல்லும்' என்ற வாசகங்கள் அவருடைய கையெழுத்திலேயே பொறிக்கப்பட்டு இருப்பது சிறப்பிலும் சிறப்பாகும். இந்த நாணயத்தின் எடையில் 50 சதவீதம் வெள்ளியாக இருப்பதால், இதை வெள்ளி நாணயம் என்றே சொல்லலாம். இந்த விழாவில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், தி மு க கூட்டணி கட்சி தலைவர்களைவிட மிக அதிகமாக கலைஞருக்கு புகழாரம் சூட்டியது, அவரது அரசியல் நாகரிகத்தை எடுத்துக்காட்டியது.

"இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆளுமை, பண்பாடு போற்றிய தலைவர், சமூகநீதிக்காக இடைவிடாது குரல் கொடுத்தவர். அவரது பொதுப்பண்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் நன்மையை அளித்துள்ளது. அவர் ஒரு மாநில தலைவர் மட்டுமல்ல, நாடு முழுவதும் செல்வாக்கு செலுத்திய ஒரு தேசிய ஆளுமையாக திகழ்ந்தார். சுதந்திர தினத்தன்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர்" என்று பல புகழ் மலர்களை மாலையாக தொடுத்து கலைஞருக்கு சூட்டி மகிழ்ந்தார், ராஜ்நாத்சிங்.

இந்த விழாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய பிரதமர் நரேந்திரமோடி, "தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் எப்போதும் அக்கறை கொண்டவராக கருணாநிதி விளங்கினார். நமது நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை கலைஞர் விட்டுச்சென்றுள்ளார். பன்முகத்திறமை கொண்ட அவர் தன் எழுத்துகளால் தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவு கூரப்படுகிறது" என்று தன் புகழுரையில் கூறியிருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தன்னுடைய வாழ்த்து செய்தியில் கலைஞரின் மேன்மையை பெருமைபட கூறியிருந்தார். மொத்தத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக மத்திய அரசாங்கம் வெளியிட்ட இந்த நாணயமும், பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்த்து செய்தியும், மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் உரையும் கலைஞரின் நீங்கா புகழுக்கு மேலும் புகழ் சேர்த்து இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்