இந்தியாவின் புகழ் மங்கை மனு பாக்கர்!

ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச்சேர்ந்த 10,741 வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளனர்.

Update: 2024-08-02 00:56 GMT

சென்னை,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பிரான்சில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டி நடந்திருக்கிறது. இப்போது மீண்டும் அங்கு நடப்பது வெகுசிறப்பாகும். இந்த போட்டியில் 206 நாடுகளைச்சேர்ந்த 10,741 வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் 329 தங்கப்பதக்கங்களுக்காக முட்டிமோதுகிறார்கள். இந்த போட்டியில் இந்தியா சார்பில் 16 வகையான விளையாட்டு போட்டிகளில், 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை மட்டுமே இந்தியா பெற்றிருந்த நிலையில், இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை பெறவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 26-ம் தேதி போட்டி தொடங்கியது. முதல் பதக்கத்தை யார் பெறப்போகிறார்கள்? என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், துப்பாக்கிச்சுடுதலில் கலப்பு பிரிவில் சீனாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனை வெற்றிவாகைச்சூடி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றனர். இந்தியாவில் இருந்து முதல் பதக்கத்தை யார் பெறப்போகிறார்கள்? என்று ஒட்டுமொத்த இந்தியாவின் கண்களும் பாரீஸ் நகரை உற்றுநோக்கிக் கொண்டிருந்தது.

அடுத்தநாளே மகளிர் 'ஏர் பிஸ்டல்' பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை 22 வயதான கல்லூரி மாணவி மனு பாக்கர் வெண்கலப்பதக்கத்தை பெற்று பெருமையுடன் பரிசு மேடையில் நின்ற காட்சி இந்திய மக்கள் அனைவரின் மனதையும் பரவசப்படுத்தியது. இந்த வெற்றி சாதாரண வெற்றியல்ல. ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் இந்தியாவின் பதக்கக்கணக்கை தொடங்கி வைத்தார். அவரது வெற்றியால் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும், ஏன் நாட்டு மக்கள் அனைவருமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்ற மனு பாக்கர் அப்போதே பதக்கம் பெறும் வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்போது அவரது துப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவரால் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. இனி நான் விளையாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று முடிவெடுத்த நேரத்தில், அவரது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா அளித்த ஊக்கத்தினால், தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டார். இதுவரை எத்தனையோ சர்வதேசப் போட்டிகளில் அவர் பதக்கங்களை பெற்றிருந்தாலும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றது இதுவே முதல்முறையாகும். அவரது பதக்க எண்ணிக்கை ஒன்றோடு முடிந்துவிடவில்லை. 2 நாட்கள் கழித்து நடந்த ஏர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் இந்திய வீரர் சரப் ஜோத்சிங்குடன் இணைந்து ஆடிய ஆட்டத்திலும் வெண்கலப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வாங்கிய முதல் இந்திய வீராங்கனை, சுதந்திரம் அடைந்த பிறகு 2 பதக்கங்களை ஒரே போட்டியில் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இன்று மேலும் ஒரு போட்டியில் அதாவது, 25 மீட்டர் பிஸ்டல் போட்டியிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இதில் என்ன முடிவு? வந்தாலும் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மனு பாக்கர் புகழ் மங்கையாக ஜொலிப்பார். அவரது வெற்றி இளைஞர் சமுதாயத்தினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும், வழிகாட்டுவதாகவும் அமைந்துவிட்டது. அவரது வெற்றிப்பயணம் அடுத்துவரும் ஒலிம்பிக் போட்டிகளிலும் வெற்றிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இந்திய மக்களுக்கு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்