வருமுன் காப்போம்

கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டதால், யாருக்கும் இப்போது கொரோனா பயம் இல்லை.;

Update:2022-12-23 01:29 IST

கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டதால், யாருக்கும் இப்போது கொரோனா பயம் இல்லை. ஆனால் கொரோனா உருவெடுத்த சீனாவில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகமாக வேகம் எடுத்துவிட்டது. கடந்த மாதம் ஊரடங்கு உள்பட பல நகரங்களில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மக்களின் போராட்டங்களால் கடந்த 7-ந்தேதி விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக கொரோனா சீனாவில் அதிவேகமாக பரவுகிறது. இப்போது கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா ஒமைக்ரான் பி.எப்.7 என்ற வகையிலான வைரசாகும்.

சீனாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு பூஸ்டர் டோஸ் போடவே மக்கள் முன்வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் 2 டோஸ் பூஸ்டர் போட்டுவிட்டார்கள். அங்கு புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் 3-வது டோஸ் பூஸ்டர் கண்டிப்பாக போட்டுவிட்டுத்தான் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா மீண்டும் அடுத்த அலையாக பரவி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும், கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து, அது எந்த வகையான கொரோனா தொற்று? அதன் வீரியம் என்ன? என்று கண்டறிவதற்காக 'இன்சாகாக்' என்று அழைக்கப்படும் இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பின் மரபணு பகுத்தாய்வு பரிசோதனைக்கு அனுப்பவேண்டும், அப்போதுதான் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களைக் கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்த முடியும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் வேகமாக பரவும் பி.எப்.7 வகை கொரோனா இந்தியாவுக்குள்ளும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் 2 பேருக்கும் இந்த பி.எப்.7 வகை கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்த மரபணு பகுத்தாய்வு மையத்தை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை கொரோனா உச்சத்தில் இருந்தபோது சென்னையில் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக சென்னையிலேயே எந்த வகை கொரோனா? என்று கண்டுபிடித்துவிட முடியும் என்கிறார், தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம். இது மட்டுமல்லாமல், சீனாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வரும் பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்துக்கு வந்துவிட்ட கொரோனா மீண்டும் தலையெடுத்து விடக்கூடாது. "வருமுன் காப்போம்" என்ற வகையில் உஷாராக இருக்கவேண்டும். மீண்டும் கொரோனா வராமல் இருப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்று அரசு பரிசீலித்து உடனடியாக செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை திட்டங்களை செயல்படுத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். பி.எப்.7 வைரஸ் கொரோனா தமிழ்நாட்டுக்குள் வந்துவிடவே கூடாது. கொரோனா பரிசோதனைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். அரசு கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை பூஸ்டர் டோஸ் போடாதவர்களுக்கும், ஏற்கனவே பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் போடலாமா? என்று மருத்துவ ஆலோசனையைப் பெறவும் மத்திய அரசாங்கத்தை தமிழக அரசு கேட்கவேண்டும். எக்காரணத்தை கொண்டும் இனி ஒரு அலையாக கொரோனா தமிழ்நாட்டுக்குள் வந்துவிடக்கூடாது.

Tags:    

மேலும் செய்திகள்