ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம்!
ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி சாதனை படைத்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பாராட்டுக்குரியது.;
தமிழ்நாடு ஒரு இறை மாநிலம் என்று சொன்னால் அது மிகையல்ல. ஆதிகாலத்தில் இருந்தே, "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்று வழக்கு மொழிகள் தமிழ்நாட்டில் உண்டு. இன்றும் கூட கோவில்களை சுற்றியுள்ள தெருக்களுக்கு சன்னதி தெரு, மாட வீதி என்ற பெயர்கள் உண்டு. திருக்கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டுமல்லாமல், பழமை வாய்ந்த தமிழர் பண்பாடு மற்றும் கட்டிடக்கலை முதலானவற்றை தன்னகத்தே கொண்டு ஓவியம், நடனம், இசை போன்ற கலைகளைக் காக்கும் களஞ்சியங்களாகவும் திகழ்கின்றன.
ஒவ்வொரு கோவிலிலும், கோவில் கோபுரங்களிலும் இத்தகைய சிறப்புகள் கொண்ட சிற்பங்களையும், ஓவியங்களையும், கல்வெட்டுகளையும் காணலாம். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டு முகப்பில்கூட, சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்ட28 அடி உயர நடராஜர் சிலை வைக்கப்பட்டிருந்தது, வந்திருந்த அத்தனை வெளிநாட்டு தலைவர்களையும் வெகுவாக கவர்ந்தது. அவர்கள் நடராஜர் சிலை முன்பு நின்று 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.
அவ்வளவு பெருமை வாய்ந்த தெய்வங்களுக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. அந்தந்த கோவில்களுக்கென்று ஆகம முறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும். பல கோவில்களில் அவ்வாறு நடத்தப்படவில்லை என்பது பக்தர்களுக்கு பெரும் குறையாக இருந்தது. அந்த குறையைப் போக்க கடந்த 26 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். பார்க்கவே பக்திபழமாக காட்சி அளிக்கும் அவர், தலைமை செயலகத்தில் இருக்கும் நேரத்தைவிட கோவில்களில்தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்றும், "அவர் சேகர்பாபு மட்டுமல்ல செயல்பாபு" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பாராட்டப்பட்டவர். அவர் தலைமையின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை 7,400 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள, ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் 2 பட்ஜெட்டிலும், தலா ரூ.100 கோடி மானியமாக வழங்க உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி, இறை பக்தி உள்ள மக்களின் மனதை குளிர்வித்தது. எடுத்துக்காட்டாக, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகும், காஞ்சீபுரம் மாவட்டம் சாத்தஞ்சேரி கரியமாணிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த வரிசையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த 26 மாதங்களில் ஆயிரமாவது கும்பாபிஷேகம், மேற்கு மாம்பலத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்தது. இந்த கோவிலை பக்தர்கள் வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலாகவே போற்றி வழிபடுகிறார்கள். ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி சாதனை படைத்த இந்து சமய அறநிலையத்துறை பாராட்டுக்குரியது. இதே வேகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத அனைத்து கோவில்களிலும் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தி இறை நம்பிக்கையாளர்களின் உள்ளம் மகிழ செய்யவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.