பரம்பரை சொத்து வரி இந்தியாவுக்கு பொருந்தாது

இந்தியாவில் 1953-ம் ஆண்டு எஸ்டேட் வரி சட்டம் கொண்டுவரப்பட்டது.

Update: 2024-04-29 00:48 GMT

சென்னை,

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. இப்போது இங்கு 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, அதில் 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 5 கட்ட தேர்தல் நடக்க வேண்டிய நிலையில், நாடு முழுவதும் பிரசாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இடையே சொற்போர் நீடித்து வருகிறது. அந்தவகையில், இப்போது அரசியல் அரங்கில் பரம்பரை சொத்து வரி பற்றி உலா வந்த கருத்தை பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெரிய சர்ச்சைக்குள்ளாக்கிவிட்டார்.

அமெரிக்காவில் பரம்பரை சொத்து வரி சட்டம் அமலில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒருவரிடம் 10 கோடி டாலர் மதிப்புள்ள சொத்து இருந்து, அவர் உயிரிழக்க நேரிட்டால், அவருடைய சொத்துக்களில்55 சதவீத சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 45 சதவீத சொத்துக்களை மட்டும் அவருடைய பரம்பரைகளுக்கு பிரித்து கொடுக்கப்படும். இதில் ஒன்றும் தவறில்லை. இது ஒரு நல்ல, நியாயமான சட்டம். இதன் மூலம் வசதிபடைத்தவர்களிடம் இருந்து அரசு கஜானாவுக்கு பணத்தை பெறமுடியும். இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும் என்று ஒரு கட்சியை சேர்ந்த தலைவர் கூறியதாக வெளிவந்த கருத்து, பெரிய அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது கட்சியின் கருத்தல்ல என்று அக்கட்சி தலைமை மறுத்துவிட்டது.

ஆனாலும், இதுதான் இப்போது பிரதமர் நரேந்திரமோடியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் பொருளாகிவிட்டது. மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த சொத்து அவர்கள் பரம்பரைகளுக்கு முழுமையாக கிடைக்காது. மாறாக, அதை மக்களிடம் இருந்து பிடுங்கி வேறு ஒருவருக்கு வழங்கிவிடும். உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பிறகும் உங்கள் சொத்துக்கள் பரம்பரைகளுக்கு கிடைக்காமல் போய்விடும் என்பது இந்த கருத்துக்கு எதிரான பிரதமர் நரேந்திரமோடியின் பேச்சு. இந்தியாவில் 1953-ம் ஆண்டு எஸ்டேட் வரி சட்டம் கொண்டுவரப்பட்டது. மரபுவழி சொத்துக்கு வரிவிதிக்கும் முறையான இந்த சட்டம் 1985-ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது. பரம்பரை சொத்துவரி என்பது மேலை நாடுகளுக்கு பொருந்தலாம். இந்திய கலாசாரத்துக்கு ஒருபோதும் பொருந்தாது. அந்த நாடுகளில் பிள்ளைகளுக்கு18 வயதாகிவிட்டால் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள். பெற்றோருடன் வாழ்வதில்லை. ஆனால், இந்திய கலாசாரத்தில் பிள்ளைகளே உலகம் என்று பெற்றோர் வாழ்ந்து வருகிறார்கள். வயிற்றைக்கட்டி.. வாயைக்கட்டி.. பரம்பரைகளுக்காக சொத்து சேர்க்கும் சமுதாயம் இது.

இந்தியா வளர்ந்து வரும் நாடாக பரிணமித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒவ்வொரு தனி நபரும் சேமிப்பு மற்றும் சொத்துக்களை உருவாக்க வேண்டும். பரம்பரை சொத்து வரி அமலுக்கு வந்துவிட்டால், நமது காலத்துக்கு பிறகு அரசாங்கம் நமது பரம்பரைகளுக்கு சேர வேண்டிய சொத்துக்களில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளப்போகிறது, நாம் ஏன் சேமிக்க வேண்டும், சொத்துக்களை உருவாக்க வேண்டும், முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்துவிடும். இதனால் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுவிடும். எனவே, இதுபோன்ற வரி நமது கலாசாரத்துக்கு எதிரானது. இதுபோன்ற எண்ணமே வேண்டாம். இந்த பேச்சை இப்படியே விட்டுவிடுவது நல்லது. ஏற்கனவே, இந்தியாவில் மரபுவழி சொத்து வரி பல ஆண்டுகள் அமலில் இருந்தது. அதனால், ஏழ்மை குறைக்கப்பட்டதா? ஏற்றத்தாழ்வுகளை குறைக்க அது உதவியதா? என்று நிபுணர்கள் கேட்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்