மக்களின் மனதை தொட்ட சுதந்திர தின உரைகள் !

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடியும், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினர்.

Update: 2024-08-17 00:54 GMT

சென்னை,

நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடியும், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினர். அவர்கள் ஏற்றிவைத்த தேசியக்கொடி எப்படி பட்டொளி வீசி பறந்ததோ, அதுபோல அவர்கள் ஆற்றிய உரையும் மக்கள் உள்ளங்களில் பட்டொளி வீசியது. சுதந்திர தின உரைகளில் புதிய அறிவிப்பு என்னென்ன இடம்பெறுமோ? என்று நாட்டு மக்களெல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர்.

பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய உரை அவரின் 11-வது உரையாகும். அவர் 3-வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு ஆற்றிய முதல் உரை. அதுவும் இந்த முறைதான் அதிக நேரம், அதாவது 98 நிமிடங்கள் பேசி பெரும் சாதனை படைத்துள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களிலேயே அதிக நேரம் உரையாற்றியது நரேந்திரமோடிதான். அவர் குறைவாக ஆற்றிய உரை என்றால் 2017-ம் ஆண்டு 56 நிமிடங்கள் பேசியதுதான். இந்த ஆண்டு ஆற்றிய உரையில் மக்களை கவர்ந்த பல அறிவிப்புகள், தகவல்கள் இருந்தன. "75-வது ஆண்டு அரசியல் சாசன தினத்தை கொண்டாடிவரும் இந்த வேளையில், பொது சிவில் சட்டம் என்ற கனவை நிறைவேற்றுவது அவசியம். அந்த சிவில் சட்டமும் மத அடிப்படையிலான சட்டமாக இருக்க தேவையில்லை. மதச்சார்பற்ற சிவில் சட்டங்கள்தான் அவசியம்" என்றும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நனவாக்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் பேசி அவருடைய அரசாங்கம் செல்லப்போகும் பாதையை கோடிட்டு காட்டிவிட்டார்.

அதுமட்டுமல்லாமல், "மருத்துவ கல்விக்கான இடங்கள் போதாத நிலையில், பலர் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் நிலையை தவிர்க்க வரும் 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்" என்று அறிவித்தார். "மேற்கு வங்காளத்தில் 31 வயதான ஒரு பெண் பயிற்சி டாக்டர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னொரு நிர்பயா சம்பவமாக நடந்தது, நாட்டு மக்கள் மனங்களையெல்லாம் கலங்கடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்ற பயத்தை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு எதிரான குற்றங்களில் புலன் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு தூக்குத்தண்டனை கூட விதிக்கலாம்" என்று பேசியுள்ளது போலீசாருக்கும், வழக்கை நடத்துபவர்களுக்கும் ஒரு நல்ல அறிவுரையாக இருந்தது.

இதுபோல, சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றிவைத்தபோது, ஏழை, எளியோருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவிடும் வகையில், குறைந்த விலையில் விற்கும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பு, மக்களின் மருத்துவ செலவை குறைக்கும். வயநாடு சம்பவம் போல் தமிழ்நாட்டிலும் மலைப்பிரதேசங்களில் பெருமழை காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து, முறையாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு வழங்கும் பரிந்துரை அடிப்படையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் என்று கூறியது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் முழங்கியது, வேலை தேடும் இளைஞர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பைக் கொடுத்தது. மொத்தத்தில் இரு உரைகளும் நாட்டு மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்