வேலைவாய்ப்புகளை அள்ளிக்குவிக்கும் 'நான் முதல்வன்' திட்டம்!
சில ஆண்டுகளுக்கு முன்னால், புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ஒருவர், தமிழ்நாட்டு இளைஞர்களிடம் வேலைகளுக்கான தகுதி இல்லை, உரிய திறன் இல்லை, ஆங்கிலத்தில் புலமை இல்லை என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ஒருவர், தமிழ்நாட்டு இளைஞர்களிடம் வேலைகளுக்கான தகுதி இல்லை, உரிய திறன் இல்லை, ஆங்கிலத்தில் புலமை இல்லை என்றார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க பல சலுகைகளை அளித்தார். இதன் பயனாக பல உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டின. அவர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து பேசும்போது, "நாங்கள் புதிய கம்பெனிகளை தொடங்கினாலும், அதில் வேலை செய்வதற்கு திறமையான இளைஞர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்கள்.
ஒரு பக்கம் வேலை இல்லாமல் திண்டாடும் இளைஞர்கள். மறுபக்கம் வேலைவாய்ப்புகள் இருந்தாலும், அதற்கு தேவையான திறமையுள்ள இளைஞர்கள் இல்லாத நிலை. இந்த இரு மலைகளையும் இணைக்கும் பாலம்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தையில் உதித்த 'நான் முதல்வன்' திட்டம். தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைத்து திறன்களையும் பெற்று, எல்லா திறன்களிலும் 'நான் முதல்வன்' என்ற நிலையை எய்தவேண்டும் என்ற குறிக்கோளில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி, அவருடைய பிறந்த நாளன்று 'நான் முதல்வன்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்திலேயே அனைத்து திறன்களிலும் பயிற்சி அளித்து, எந்த வேலைக்கும் தகுதியுள்ளவர்கள் என்று ஆக்கும் வகையில், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளிலும் பல்வேறு திறன்களுக்கான, குறிப்பாக நவீன தகவல் தொழில் நுட்பங்களுக்கான பாடப்பயிற்சி செயல்முறை விளக்கங்களோடு வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள், இந்த திட்டத்தை மிகவும் வெற்றிகரமான திட்டமாக்கவேண்டும் என்று தீவிர முயற்சிகளை எடுத்தனர். முதல்-அமைச்சரும் அடிக்கடி இதுகுறித்து ஆய்வுகளை நடத்தி, ஒரு உந்து சக்தியாக விளங்கினார்.
கடந்த ஒரு ஆண்டில், இந்த 'நான் முதல்வன்' திட்டம் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி என்ற இலக்குக்கு மேலாக, 13 லட்சத்து 14 ஆயிரத்து 519 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 445 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வழங்கப்பட்ட திறன் பயிற்சிகள் மூலமாக 65 ஆயிரத்து 34 மாணவர்களும், இறுதி ஆண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பினை முடித்த 83 ஆயிரத்து 223 மாணவர்களும் பணி நியமன ஆணையைப் பெற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல், 25 ஆயிரத்து 926 இளைஞர்கள் வேலைவாய்ப்புகளும் பெற்றுள்ளனர். ஆக, மொத்தம் இந்த ஒரு ஆண்டிலேயே 'நான் முதல்வன்' திட்டம், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 183 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தந்து, அவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறது.
தலைநகரத்தில் இருக்கிற தலை சிறந்த கல்லூரிகளில் படித்தால்தான் சிறந்த வேலைவாய்ப்பும், எதிர்காலமும் இருக்கும் என்ற மாயை இப்போது தகர்த்தெறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எந்த மூலை முடுக்கில் உள்ள கல்லூரி என்றாலும் சரி, அங்கு 'நான் முதல்வன்' திட்டத்தில் வழங்கப்படும் திறன் பயிற்சிகள் மூலம், கிராமப்புற மாணவர்களும் கை நிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு பெற முடியும் என்ற நிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் பணி நியமன ஆணையைப் பெற்ற மாணவர்கள் நிரூபித்து விட்டார்கள்.