நிதி கொடுக்காமல் எப்படி நிலத்தை கையகப்படுத்த முடியும்?

கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு ஒப்புதலும் வழங்கப்படவில்லை.

Update: 2024-08-23 00:34 GMT

சென்னை,

கடந்த மாதம் 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய அரசாங்கத்துக்கு நறுக்கு தெறித்தாற்போல சில கோரிக்கைகளை முன்வைத்தார். 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான நிதி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலை திட்டத்துக்கான ஒப்புதல், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்த கோரிக்கைகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கான புதிய அறிவிப்புகளோ, திட்டங்களோ எதுவும் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அறிவித்து அதை புறக்கணித்தார். அவரை பின்பற்றி 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த மற்ற முதல்-மந்திரிகளும் புறக்கணித்தனர். அப்போது, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக பேட்டியளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், "இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டு ரெயில்வே திட்டங்களுக்கு ரூ,6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ஒதுக்கியதைவிட 7 மடங்கு அதிகம்" என்று கூறியிருந்தார். மேலும், எதிர்க்கட்சி ஆளும் மற்ற மாநிலங்களுக்கும் கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பெருமிதம் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல், மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, "தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணம் நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு ஒத்துழைப்பு தராததே" என்று குற்றம் சாட்டினார். "தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்கு தேவையான 2,749 ஹெக்டேர் நிலத்தில் இதுவரை தமிழக அரசால் 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். தமிழ்நாட்டுக்கு ரூ,6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டதை பெருமையாக சொன்ன மத்திய மந்திரி, பா ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை சொல்லவில்லை. பா ஜனதா ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசத்துக்கு ரூ,19,848 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ,14,738 கோடியும், ஒடிசாவுக்கு ரூ,10,586 கோடியும், குஜராத்துக்கு ரூ,8,743 கோடியும் ஒதுக்கியதோடு மட்டுமல்லாமல், பா ஜனதா கூட்டணி அரசாங்கம் நடக்கும் மாநிலங்களான மராட்டியத்துக்கு ரூ,15,940 கோடியும், பீகாருக்கு ரூ,10,033 கோடியும், ஆந்திராவுக்கு ரூ,9,151 கோடியும் தாராளமாக ஒதுக்கியதை ஒப்பிட்டால்தான் ரெயில்வேக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் தமிழகத்துக்கு எவ்வளவு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகும்.

நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மறுத்தார். கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு ஒப்புதலும் வழங்கப்படவில்லை, நிதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் சொல்லியிருப்பதையும் புறந்தள்ளிவிட முடியாது. நிதி தராமல் எப்படி நிலத்தை கையகப்படுத்த முடியும்?. எனவே, தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், அதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கும் மத்திய அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கவேண்டுமே தவிர காரணம் சொல்லிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்