மக்களுடன் முதல்வர்!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வரும் முன்பும், வந்த பிறகும் மக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பதையே தலையாய கடமையாக கொண்டுள்ளார்.

Update: 2023-12-17 18:39 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வரும் முன்பும், வந்த பிறகும் மக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பதையே தலையாய கடமையாக கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் கட்சி தொண்டர்களை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் சந்தித்து வருகிறார். அவர் எப்போதும் காலையில் நடைப் பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த நேரத்தில் பொதுமக்களிடம் குறைகேட்பது வழக்கம். அவரது இந்த அணுகுமுறையை கண்டு கலைஞர் கருணாநிதி தனக்கு வேண்டியவர்களிடம் பேசும்போது மகிழ்வுடனும், பெருமையுடனும் பாராட்டியது உண்டு.

தேர்தலுக்கு முன்பு அனைத்து இடங்களுக்கும் பிரசாரத்துக்கு செல்லும்போது, மேடையில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று எழுதப்பட்ட பெட்டியைவைத்து, அதில் மக்களின் கோரிக்கை மனுக்களை போடச் சொன்னார். ஆட்சிக்கு வந்தவுடன், அந்த மனுக்களுக்கு தீர்வுகாண, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற துறையை உருவாக்கி, அதற்கு பொறுப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் என்ற துடிப்புள்ள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து, 100 நாட்களில் அனைத்து மனுக்களுக்கும் தீர்வுகண்டு வரலாற்றுச் சாதனையை படைத்தார். அதில் கிடைத்த வெற்றியைக்கண்டு, தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 'முதல்வரின் முகவரித்துறை' என்ற புதிய துறையை உருவாக்கி, கடந்த 2½ ஆண்டுகளில் மட்டும் 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வுகாணப்பட்டு வருகிறது.

இப்போது, 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தின் மூலம், மக்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பலன்கள் அவர்களுக்கு போய்ச் சேருகிறதா? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்தி வருகிறார். மற்றொரு மைல் கல்லாக, 'மக்களுடன் முதல்வர்' என்ற மற்றொரு திட்டத்தை உருவாக்கியுள்ளார். அவரது சிந்தையில் உதித்த இந்த திட்டத்தை, இன்று அவர் கோயம்புத்தூரில் தொடங்கிவைக்கிறார்.

பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக அரசின் முக்கியமான பல துறைகளை அணுகி மனுக்கொடுக்க வேண்டியநிலை இருக்கிறது. அவர்கள் இப்படி ஒவ்வொரு துறை அலுவலகங்களாக தேடி அலைவதற்குப் பதிலாக, அவர்களின் கோரிக்கைகளை பெறுவதற்கு வசதியாக அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்துவதுதான் இந்த புதிய திட்டத்தின் நோக்கமாகும். முதல் கட்டமாக இன்று முதல் வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் என்று 1,745 இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்பின், அடுத்தடுத்து அனைத்து இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும். அனைத்து முக்கிய துறைகளும் ஒரே இடத்தில் இருந்து மக்களின் கோரிக்கைகளை பெறும். 30 நாட்களுக்குள் இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். மக்களின் குறைகளைக் களைய, மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்க உதவும் இந்தத் திட்டம், ஒரு சிறப்பு வாய்ந்த திட்டமாகும். சில நேரங்களில், ஒரு மனுவிலுள்ள கோரிக்கைகளுக்கு பல துறைகளின் கருத்து தேவைப்படும். இப்போது அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் இருப்பதால், உடனேயே அந்த துறைகளின் கருத்துகளையும் பெற முடியும். மக்களின் பல கோரிக்கைகளுக்காக பல அலுவலகங்களைத் தேடி அலையாமல், அனைத்து அலுவலக அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்தித்து மனுகொடுக்கவும், 30 நாட்களுக்குள் தீர்வுகாணவும் வழிவகை செய்துள்ள இந்தத் திட்டம், மக்களுக்கு மிகவும் பலனளிக்கும் திட்டமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்