சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா..!

மீண்டும் தி.மு.க. ஆட்சி 2021-ல் மலர்ந்ததில் இருந்து, ‘சென்னை சங்கமம்’ உயிர் பெற்று, ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

Update: 2024-02-07 20:06 GMT


தமிழர்களுக்கு என்று தனி கலாசாரம் காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. அதன் பயனாய், கிராமிய கலைகள், பாரம்பரிய உணவுகள் தோன்றின. ஆனால், பிழைப்பு தேடி நகர வாழ்க்கைக்கு மக்கள் செல்லத் தொடங்கிய பிறகு, இவை எல்லாம் மங்கி மறையத் தொடங்கிவிட்டன. பரபரப்பான வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால இளைய தலைமுறைக்கு, அக்கால அமைதியான கிராமத்து வாழ்க்கை தெரிய வாய்ப்பு இல்லை.

எனவே, கிராமிய கலைகளுக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாக 2007-ம் ஆண்டு கனிமொழி எம்.பி., மறைந்த கலைஞர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, 'சென்னை சங்கமம்' விழாவை பல இடங்களில் நடக்கும் வகையில் தொடங்கினார். பொங்கல் நேரங்களில் பல இடங்களில் நடந்த இந்த விழா, சென்னை நகர மக்களுக்கு புதுமையாக தெரிந்தது. பலர் குடும்பம் குடும்பமாக சென்று, "தங்கள் குழந்தைகளுக்கு இதுதான் நம் சொந்த ஊரில் நடக்கும் கிராமிய நடனம், கிராமிய கலை, அந்த காலங்களில் ஊர் கோவில் விழாக்களில், குலதெய்வ கோவில்களில் நாங்களெல்லாம் கண்டு களிப்போம்" என்று பழைய நினைவுகளை பசுமையாய் அசைபோட்டு, இந்த தலைமுறைக்கு விளக்கி கூறினர்.

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கிராமிய கலைஞர்கள் பலர் சினிமா உலகில் வாய்ப்பு பெற்றனர். எடுத்துக்காட்டாக, கிராமிய பாடகி சின்னப்பொண்ணு, 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தில் 'நாக்க முக்க' பாடலை பாடி, பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். நிறைய பேருக்கு பல ஊர்களில் நிகழ்ச்சிகள் நடத்தவும் வாய்ப்பு கிடைத்தது. பறை, நையாண்டி மேளம், கணியன் கூத்து போன்ற கலைகளெல்லாம் மறுமலர்ச்சி பெற்றது. 2007-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மக்களையும் மகிழ்வித்து, நாட்டுப்புற கலைஞர்களுக்கும் வாழ்வளித்த 'சென்னை சங்கமம்' விழா 2011-ல் ஆட்சி மாறியவுடன் நிறுத்தப்பட்டுவிட்டது.

மீண்டும் தி.மு.க. ஆட்சி 2021-ல் மலர்ந்ததில் இருந்து, 'சென்னை சங்கமம்' உயிர் பெற்று, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இப்போது தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இந்த விழாவை நடத்துகிறது. இந்த ஆண்டு பொங்கலையொட்டி, 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில், சென்னையில் 18 இடங்களில் 4 நாட்கள் நடந்தன. 1,200 கிராமிய கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த திருவிழாவில் செவ்வியல் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்திக்காட்டப்பட்டன.

இது மக்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தளித்தது. இந்த 'சென்னை சங்கமம்' விழாவில், முன்பு இருந்ததுபோல தமிழ்நாட்டின் பல ஊர்களில் உள்ள உணவு வகைகளும் இடம் பெற்றால், இளைய தலைமுறைக்கு மண் மணம் மாறாத நமது பாரம்பரிய உணவு வகைகளும் தெரியும், அதில் உள்ள சத்துக்களும் புரியும். 'சென்னை சங்கமம்' விழாவை மற்ற நகரங்களிலும் நடத்தினால், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை மக்களால் தெரிந்துகொள்ள முடியும். நாட்டுப்புற கலைஞர்களுக்கும் புதிய வாழ்வு கிடைக்கும். அரசு விழாக்களிலும் இந்த கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்