தகுதியானவருக்கு தகுதியான நாளில் வழங்கும் விருது!

நாளை குடியரசு தின விழாவில், அரசின் சார்பில் பூரணம் அம்மாளுக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.;

Update:2024-01-25 01:42 IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "கல்விதான் உண்மையான அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து, தனது ஒரு ஏக்கர் 52 செண்ட் நிலத்தை அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக கொடையாக அளித்துள்ளார், மதுரை யா.கொடிக்குளத்தை சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அம்மாள். ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும், கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் அவரின் கொடை உள்ளத்தைப்போற்றி பெருமைப்படுத்தும் வகையில், நாளை குடியரசு நாள் விழாவில், அரசின் சார்பில் அவருக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

இதைப்படித்தவுடன் எல்லோருக்கும், 'யார் இந்த பூரணம் அம்மாள்?' என்ற ஆவல் ஏற்பட்டது. ஏழைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டாலே அதை விளம்பரப்படுத்தி புகழ்தேடும் சமுதாயத்தில், இவ்வளவு பெரிய நன்கொடையை சத்தமில்லாமல் பூரணம் அம்மாள் வழங்கியுள்ளார். அவருடைய வயது 52. தனது 8 வயதில், முதலில் தந்தையையும், அடுத்து தாயையும் இழந்த அவர், தொடக்கக் கல்வியை யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்தான் படித்தார். 18 வயதிலேயே திருமணமான அவர், 2½ ஆண்டுகளில் கணவரையும் ஒரு விபத்தில் பறிகொடுத்தார். ஒரே மகள் ஜனனியை ஆசை ஆசையாக வளர்த்தார். கணவர் பணியாற்றிய வங்கியில் அவருக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைத்து, இப்போதும் அந்த வங்கியில் எழுத்தராக பணியை தொடர்கிறார். மகள் ஜனனியை மணமுடித்து கொடுத்த பின், அவரும் மறையவே பூரணம் அம்மாளுக்கு உலகமே இருண்டுபோனது.

அடுத்தடுத்து, குடும்பத்தில் உயிரிழப்புகளை சந்தித்த அவருக்கு, கொடை உள்ளம் மட்டும் மங்கிப்போகவில்லை. தனது தந்தை திருமணச் சீராகக் கொடுத்த ஒரு ஏக்கர் 52 செண்ட் நிலத்தின் சந்தை மதிப்பு இப்போது ரூ.7 கோடி என்பதை சற்றும் பொருட்படுத்தாமல், தமிழக அரசின் 'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டத்தின் கீழ், தான் படித்த யா.கொடிக்குளம் பள்ளிக்கூடத்துக்கு தானப்பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு, சத்தமில்லாமல் வங்கிக்கு வந்து வழக்கமான பணியைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். இதைக் கேள்விப்பட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பூரணம் அம்மாள் பணியாற்றிக் கொண்டிருந்த வங்கிக்கு சென்று பாராட்டியபிறகுதான் வெளியே தெரிந்தது.

கல்விக்காக தானம் செய்வதில் மற்றவருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பூரணம் அம்மாள், 20 ஆண்டுகளுக்கு முன்பே சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட தன் சகோதரருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தையும் தானமாக வழங்கி, உடல் உறுப்பு தானத்திலும் முன்னோடியாக விளங்குகிறார். ஏற்கனவே, தான் படித்த அதே பள்ளிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 லட்சம் செலவில் கழிப்பறை-குடிநீர் வசதி, மாணவர்களுக்கு நோட்டு-எழுதுபொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். அவரது இந்த கொடை உள்ளத்துக்கு தகுதியான ஒரு விருது, தகுதியான விழாவில், தகுதியான ஒரு முதல்-அமைச்சரால் வழங்கப்படுவது சாலப்பொருத்தமுடையதாகும். 'இந்த நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக வேண்டும், அதற்கு உயிருடன் இருக்கும்போதே நம்முடைய நிலத்தை கொடுக்கவேண்டும்' என்று சொன்ன மகள் ஜனனியின் பெயரை சூட்டவேண்டும் என்ற பூரணம் அம்மாளின் ஆசையும், கல்வித்துறையால் பரிசீலித்து நிறைவேற்றப்படவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்