தமிழ்நாட்டில் மேலும் ஒரு அரசியல் கட்சி

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார்.

Update: 2024-02-13 23:37 GMT

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. நிறைய கட்சிகள் 'லெட்டர் பேடு' கட்சிகளாக இருந்தாலும், புதுக்கட்சிகளின் வரவு குறையவில்லை. திராவிட கட்சிகள் எல்லாமே கழகம் என்ற பெயரில்தான் இயங்குகின்றன. சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கெல்லாம் அடுத்த இலக்கு அரசியல்தான். சினிமாவில் பெற்ற புகழ், ரசிகர் பட்டாளமெல்லாம் அரசியலில் செல்வாக்கைப் பெற்றுத்தந்துவிடும் என்று நினைக்கிறார்கள். எல்லோருமே எம்.ஜி.ஆர். அரசியலில் ஜொலித்ததைப் பார்த்து, அவரைப்போல ஆகிவிடலாம் என்று கணக்குப்போட்டு அரசியலில் நுழைகிறார்கள். அவர்கள் ஆசையை மேலும் வளர்ப்பது ஜெயலலிதா அரசியலில் கோலோச்சியதுதான்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு முன்பே திரைத்துறையில் ஈடுபாடு கொண்ட அண்ணா, கருணாநிதி ஆகியோர் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்று முதல்-அமைச்சர்களாகியிருக்கிறார்கள். ஆனால், அந்த இரு தலைவர்களும் அரசியலை பிரதானமாக வைத்து, சினிமாவை ஒரு துணை தொழிலாகத்தான் வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரைப் பொறுத்தமட்டில், சினிமாவில் நடித்துக்கொண்டே பல ஆண்டுகளாக தி.மு.க.விலும் மிக தீவிரமாக பணியாற்றினார். தன் படங்களில் மிகத்துணிச்சலாக தி.மு.க. கொடி, அண்ணாவின் படங்களை காட்டினார். பாடல்களில் அண்ணா பெயர் இடம்பெறச்செய்தார். பல படங்கள் தி.மு.க. பிரசாரத்துக்கு வலு சேர்த்தது. தி.மு.க. வளரும்போது அதோடு அவரும் வளர்ந்தார். அரசியலில் மும்முரமாக இருந்தபோதும் அவர் சினிமாவில் நடிப்பதை விடவில்லை. அவர் முதல்-அமைச்சரான பிறகும் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' படம் திரைக்கு வந்தது. அவருடைய பெரிய பலம், ரசிகர்களெல்லாம் அப்படியே கட்சியின் தொண்டர்களானதுதான்.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார் என்றால், சினிமாவில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்து, அவரது ரசிகர்கள் மனதில் இடம்பெற்றதும், அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு கொள்கை பரப்பு செயலாளராக ஊர் ஊராக போய் கட்சி பணியாற்ற வைத்ததுதான் அவருக்கு அரசியலில் ஒரு அந்தஸ்தை அளித்தது. மேலும், எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கட்சியின் தலைமைப்பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. எம்.ஜி.ஆரைப்போல ஆகிவிடலாம் என்று நினைத்து, அவர் உயிரோடு இருந்தபோதும், மறைவுக்கு பிறகும் பல நடிகர்கள் அரசியலில் குதித்தும் கரைசேர முடியவில்லை. தன் நடிப்பு திறமையால் எம்.ஜி.ஆருக்கு இணையாக ரசிகர்களைக் கொண்டிருந்த சிவாஜி கணேசனால்கூட அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை குறையவில்லை.

இப்போது புது வரவாக நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் சமுதாய நலப்பணிகளை செய்துவந்த அவர், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதுபோல, கழகத்தை கட்சியின் பெயரில் இணைத்து, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஆனால், இப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் அவர் தன் கட்சியின் கொள்கைகளை கூறவில்லை. இப்போது நடிக்கும் படத்துக்கு பிறகு, இன்னொரு படத்திலும் நடித்துவிட்டு விடைபெறப்போவதாக கூறியிருக்கிறார். அவர் நடிப்பதை நிறுத்திய பிறகுதான், அவர் ரசிகர்களெல்லாம் தொண்டர்களாக தொடர்வார்களா? என்பது தெரியும். மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் அவரது செயல்பாடுகளைப்பார்த்த பிறகுதான், அரசியலில் தமிழக வெற்றி கழகம் நிமிர்ந்து நிற்குமா? அல்லது பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்று ஆகிவிடுமா? என்பது தெரியும். 

Tags:    

மேலும் செய்திகள்