வளம் கொழித்த அட்சய திருதியை...

தமிழ் மாதமான சித்திரையின் வளர்பிறையில், அமாவாசை நாளில் இருந்து அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும் வசந்தகால பண்டிகைதான் அட்சய திருதியை ஆகும்.

Update: 2024-05-18 00:47 GMT

சென்னை,

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அட்சய திருதியை நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அட்சய திருதியைப் பற்றி சமண மதத்திலும், இந்து மதத்திலும் குறிப்புகள் இருக்கின்றன. இந்த நாள் இந்துக்கள் மற்றும் சமணர்களின் புனித நாளாக இருந்தாலும், அனைத்து மதத்தினரும் இந்த நாளில் தங்கம் வாங்குவதை ஒரு நல்ல பெருக்கமாக அதாவது, செல்வம் பெருகும் நாளாக மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் நாளாகவும் கருதுகிறார்கள். இதுபோன்று அட்சய திருதியை நாள் குறித்து பலவித நம்பிக்கைகள் இருக்கின்றன.

தமிழ் மாதமான சித்திரையின் வளர்பிறையில், அமாவாசை நாளில் இருந்து அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும் வசந்தகால பண்டிகைதான் அட்சய திருதியை ஆகும். 'அட்சய' என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில், 'எப்போதும் குறையாதது' என்று பொருள் உண்டு. மேலும் இந்த நாளில் தங்கம், வெள்ளி, வீடு, மனை போன்ற விலையுயர்ந்த பொருட்கள் வாங்கினால் அது பெருகும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பெண்களுக்கு இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மரபியல் வழி வந்தவர்கள் அட்சய திருதியை நாளில் தொடங்கப்படும் எந்த முயற்சியும் தொடர்ச்சியாக ஓங்கி, உயர்ந்து, வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்று கூறுகின்றனர். இதனால்தான் தங்கம் வாங்குவது மட்டுமல்லாமல், புதிய வணிகத்தை தொடங்குவது, புதிய முயற்சிகளை தொடங்குவது, கட்டிடம் கட்ட பூமிபூஜை போடுவது, அடிக்கல் நாட்டுவது போன்ற புதிய முயற்சிகள் இந்த நல்ல நாளில் நடக்கிறது.

இந்து இதிகாசப்படி அட்சய திருதியை நாளன்றே வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுத சொல்லி கட்டளையிட்டார். அதனால்தான் பலர் இந்த நாளில் தங்கள் தொழிலுக்கான புதுக்கணக்கை எழுதுகிறார்கள். அந்தவகையில் பெண்கள் இந்த அட்சய திருதியை நாளில் ஒரு பொட்டு தங்கமாவது வாங்கினால் அது பெருகும், மேலும் அதிக அளவில் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நகைக்கடையை தேடிப்போகிறார்கள். பல நகைக்கடைகளில் மாதாந்திர சீட்டு தொடங்கி மாதந்தோறும் சீட்டுப் போட்டால் அட்சய திருதியை அன்று நகை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பதும் உண்டு.

இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று எல்லா ஊர்களிலும் நகைக்கடைகளில் பெரும் கூட்டம் இருந்தது. இவ்வளவுக்கும் தங்கம் விலை அட்சய திருதியையன்று ஒரே நாளில் 3 முறை உயர்ந்தது. அன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.54 ஆயிரத்து 160 ஆக இருந்தாலும், யாரும் அதை பொருட்படுத்தவில்லை. அட்சய திருதியை நாளன்று தமிழ்நாட்டில் ரூ.16,750 கோடிக்கு தங்கம் விற்பனையாகி பெண்களிடம் சொத்தாக சேர்ந்துள்ளது. இதில் அரசுக்கு 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மூலம் ரூ.500 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அதே போல அன்றைய தினம் பொதுமக்கள் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு புதிதாக சொத்துக்கள் வாங்கி குவித்தனர். பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் வீடு, நிலங்கள் விற்பனையும், சொத்துகளுக்கான பத்திரப்பதிவும் குறைவாகவே இருக்கும். இருப்பினும், வெள்ளிக்கிழமையில் வந்த அட்சய திருதியை நாளன்று மொத்தம் 14 ஆயிரத்து 647 பத்திரங்கள் பதிவாகின. இதன்மூலம் அரசுக்கு ரூ.104 கோடியே 71 லட்சம் வருமானமாக கிடைத்தது. மொத்தத்தில் மக்களுக்கு தங்கமாகவும், சொத்துகளாகவும், அரசுக்கு வருமானம் அள்ளிக்குவித்த நாளாகவும், அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வளம் கொழித்த நாளாகவும் இந்த அட்சய திருதியை விளங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்