சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை

அரசு பணிகள் நத்தை வேகத்தில்தான் நகரும் என்று பொதுவாக மக்களிடம் ஒரு கருத்து உண்டு. ஆனால், இல்லை.. இல்லை.. அரசு பணிகளை நத்தை வேகத்தில் அல்ல, சுனாமி வேகத்தில் நடத்திக்காட்ட முடியும் என்ற சாதனையை தமிழக அரசின் பொதுப்பணித்துறை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது.

Update: 2023-06-18 19:49 GMT

அரசு பணிகள் நத்தை வேகத்தில்தான் நகரும் என்று பொதுவாக மக்களிடம் ஒரு கருத்து உண்டு. ஆனால், இல்லை.. இல்லை.. அரசு பணிகளை நத்தை வேகத்தில் அல்ல, சுனாமி வேகத்தில் நடத்திக்காட்ட முடியும் என்ற சாதனையை தமிழக அரசின் பொதுப்பணித்துறை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது. இந்தியாவில் புகழ்பெற்ற மருத்துவமனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைதான். மத்திய அரசாங்கம், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று 2015-ம் ஆண்டு அறிவித்தது. தமிழ்நாட்டில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவது என்று இடத்தை தேர்வு செய்வதற்கே பெரும் காலதாமதமாகியது. கடைசியாக மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள தோப்பூரில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கட்டப்பட்டதால், பணிகள் வேகமாக நடந்து முடிந்துவிட்டன. தமிழ்நாட்டில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், அதாவது ஜிக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 262 ஏக்கர் நிலத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்றுவரை சுற்று சுவரை தவிர வேறு எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. இப்போதுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கட்டுமான பணிகள் தொடங்கி, முதல் நிலை பணிகள் முடிந்து, 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பணிகளும் 2033-ம் ஆண்டு முடியும் என ஜிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்றவுடன் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாளன்று, தென் சென்னையில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த மருத்துவமனைக்காக 4.89 ஏக்கர் நிலத்தை கிண்டி கிங் மருத்துவ வளாகத்தில் தேர்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 500 படுக்கைகள் என்ற எண்ணிக்கையை ஆயிரம் படுக்கைகள் என்று உயர்த்தி 2022-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதி இந்த மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டினார்.

திட்டமிட்டதற்கும் குறைந்த செலவில் கூடுதல் வசதிகளுடன் ரூ.240.54 கோடி செலவில் 6 லட்சம் சதுர அடி பரப்பில், 6 தளங்கள் கொண்ட இந்த உலகத்தர மருத்துவமனை 3 பிரமாண்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் ஒரு ஒப்பந்ததாரரிடம் கொடுக்கப்பட்டு, சுனாமி வேகத்தில் தமிழக அரசு பொதுப்பணித்துறை மேற்பார்வையில் பணிகள் நடந்தன. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என்று பெயரிடப்பட்ட இந்த மருத்துவமனை, பதினைந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்ட இந்த மருத்துவமனையில், மக்கள் உயர் சிகிச்சைகளைப்பெற முடியும். இந்த மருத்துவமனையை மருத்துவ புரட்சி என்றே கூறலாம். இந்த சாதனையை நிகழ்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை பாராட்டும் தமிழக மக்கள், இதுபோல குறைந்த காலக்கெடுவில் தமிழ்நாட்டில் பரவலாக மேலும் பல உயர் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்