கைவிட்டுப்போன அமேதி; கைகொடுக்குமா ரேபரேலி?

5-ம் கட்டமாக வருகிற 20-ந்தேதி 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் தேர்தல் நடைபெறப்போகிறது.

Update: 2024-05-14 00:33 GMT

சென்னை,

நாடு முழுவதும் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 19-ந்தேதி தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந்தேதி 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடந்தது. மீண்டும் கடந்த 7-ந்தேதி 12 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளிலும், நேற்று 13-ந்தேதி 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளிலும் நடந்தது. ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்து, அங்கு 2-ம் கட்ட தேர்தலின்போது, வாக்குப்பதிவும் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த நிலையில், இப்போது 5-ம் கட்டமாக வருகிற 20-ந்தேதி 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. அதில், உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதியும், ரேபரேலியும் அடங்கும். ஏற்கனவே, வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல்காந்தி 2-வது முறையாக அங்கு போட்டியிடுவதுடன், இப்போது ரேபரேலி தொகுதியிலும் களம்காண வேட்புமனு தாக்கல் செய்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால், இந்த தொகுதியில் சோனியாகாந்தி 2004-ம் ஆண்டு முதல் இப்போது வரை 20 ஆண்டுகளாக போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்திருக்கிறார். இந்த முறை உடல் நலத்தை காரணம் காட்டி அவர் தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரேபரேலியில் அவரது மகள் பிரியங்கா காந்தி முதன் முதலாக களம் காணுவார் என்று அரசியல் உலகில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ரேபரேலி தொகுதிக்கு அருகில் உள்ள அமேதியில் போட்டியிட்டு ஏற்கனவே 3 முறை வெற்றி பெற்றிருந்த ராகுல்காந்தி, கடந்த முறை ஸ்மிரிதி இரானியிடம் அங்கு தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு இழந்த செல்வாக்கை மீட்டுக்காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சஞ்சய்காந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி என்று இந்திராகாந்தி குடும்பத்தில் பலரும் போட்டியிட்ட அமேதி தொகுதியில் இந்த முறை யாரும் போட்டியிடவில்லை. இருப்பினும், 40 ஆண்டுகளாக அந்த குடும்பத்தின் நெருங்கிய விசுவாசியான கே.எல்.சர்மா இப்போது நிறுத்தப்பட்டுள்ளார்.

1980-ம் ஆண்டு சஞ்சய்காந்தி போட்டியிட்டதில் இருந்து வழி வழியாக இந்திராகாந்தி குடும்பம் போட்டியிட்ட அமேதி தொகுதிக்கு இந்த முறை அந்த குடும்பம் 'டாட்டா' காட்டிவிட்டது. ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில், இதுவரை நடந்த 17 தேர்தல்களில் 14 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. ராகுல்காந்தியின் தாத்தா பெரோஸ்காந்தி 1952, 1957 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். 1967, 1971 மற்றும் 1980-ல் நடந்த தேர்தல்களில், பாட்டி இந்திராகாந்தியும், 2004 முதல் 5 தேர்தல்களில் தாய் சோனியாகாந்தியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது ராகுல்காந்தியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் தினேஷ்சிங் போட்டியிடுகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவர் 1956-ம் ஆண்டு பெரோஸ்காந்தியின் முயற்சியால் தொடங்கப்பட்ட பெரோஸ்காந்தி கலை கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.

இப்போது, வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில், எது ராகுல்காந்திக்கு கை கொடுக்கும்? இரண்டுமே கை கொடுத்தால், எந்த தொகுதியை கைவிடுவார்? என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்