வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு!

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏராளமான உயிரிழப்புகள், வீடுகள் இடிந்து தரை மட்டமாகிய சம்பவங்கள் என்று அடுக்கடுக்காக பல சேதங்கள் ஏற்பட்டன.

Update: 2024-03-15 00:33 GMT

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த இயற்கை பேரழிவு, 2023-ம் ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக்கிவிட்டது. டிசம்பர் மாதம் 3, 4-ந்தேதிகளில் மிக்ஜம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளானார்கள். அனைத்து குடும்பங்களுக்கும் அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. மழை சேதத்தை பார்வையிட உடனடியாக மத்திய குழு வந்தது. அரசு சார்பில் மத்திய அரசாங்கத்திடம் தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் கோரப்பட்டது.

அந்த காயம் ஆறாத நிலையில், மீண்டும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியிலும் 17, 18, 19-ந்தேதிகளில், பேய் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏராளமான உயிரிழப்புகள், வீடுகள் இடிந்து தரை மட்டமாகிய சம்பவங்கள், விளை நிலங்கள் பாதிப்பு, மீன்பிடி படகுகள், வலைகளுக்கு சேதம் என்று அடுக்கடுக்காக பல சேதங்கள் ஏற்பட்டன.

அனைத்து சேதங்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற மாவட்ட மக்களுக்கு ரூ.1.000-ம் வழங்கப்பட்டது. இந்த இரு சேதங்களுக்கும் ரூ.37,907.19 கோடி நிவாரணமாக, மத்திய அரசாங்கத்திடம் கோரப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை எம்.பி.க்களும் நேரில் சந்தித்தனர். ஆனால், இந்த நிதியுதவி இன்னும் வரவில்லை. இதனால், வீடு இழந்த மக்களும், வீடு சேதமடைந்த மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசாங்கத்தின் நிதி வரும்வரை காத்திருக்காமல், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கருணைக்கரம் நீட்டியுள்ளது. இந்த இரு பேய் மழையால் 7 மாவட்டங்களில் 4,577 வீடுகள் முழுமையாகவும், 9,975 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. முழுமையாக சேதம் அடைந்த வீடுகளை திரும்ப கட்டவும், பகுதியாக சேதம் அடைந்த வீடுகளை பழுது பார்க்கவும் தமிழக அரசு நிதியுதவி அளிப்பதற்காக ரூ.382 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி முழுமையாக சேதம் அடைந்த வீடுகளை மறுபடியும் கட்டுவதற்கு 3 தவணைகளில் ரூ.4 லட்சமும், பகுதியாக சேதம் அடைந்த வீடுகளுக்கு 2 தவணைகளில் ரூ.2 லட்சமும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓடு, கூரை, தரைத்தளம் மாற்றுதல், சேதம் அடைந்த சுவர்களை திரும்பக்கட்டுதல், கதவு ஜன்னல்களை மாற்றுதல் போன்றவையும் நிதியுதவி பட்டியலில் வரும்.

அரசு உத்தரவை பிறப்பித்துவிட்டது. இனி அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகளை விரைந்து வழங்கவேண்டும். சில ஏழை வீடுகளில் அரசு கேட்கும் பல நிபந்தனைகளை, அத்தாட்சிகளை வழங்க முடியாத நிலை இருக்கும். ஆனால், இத்தகையோரை கருணை பார்வையோடு அதிகாரிகள் காணவேண்டும். பாதிக்கப்பட்ட ஒருவர்கூட விட்டுப்போகாதபடி அரசு உதவிகளை வழங்கவேண்டும். கடந்த 3 மாத காலமாக வீடு இல்லாமலும், ஓட்டை வீடுகளிலும் வாழும் மக்களுக்கு அரசின் இந்த நிதியுதவியை வழங்க ஒரு காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வழங்கவேண்டும். மத்திய அரசாங்கமும், போதும்.. போதும்.. இந்த தாமதம் என்று முடிவெடுத்து உடனடியாக தமிழக அரசு கோரிய நிதியுதவியை வழங்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்