மின்சாரம் தாக்கி 89 யானைகள் உயிரிழப்பு
கடந்த சில மாதங்களாகவே காடுகளில் இருந்து பல விலங்குகள் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் வந்துவிடுகின்றன.
கடந்த சில மாதங்களாகவே காடுகளில் இருந்து பல விலங்குகள் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் வந்துவிடுகின்றன. குடியிருப்புகளுக்குள் விலங்குகள் வருவதால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மலை அடிவாரங்களில் உள்ள விளை நிலங்களுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி யானைகள் வந்து துவம்சம் செய்துவிடுவதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகிறார்கள். இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு யானைகளை விரட்ட பட்டாசுகள் வாங்குவதற்கென்று பெரிய தொகை செலவாகிவிடுகிறது. அடிக்கடி பட்டாசு சத்தத்தை கேட்கும் யானைகளுக்கு அதற்கு பயம் இல்லாமல் போய்விட்டது. எனவே விவசாயிகள் மாற்று வழியை கடைப்பிடிக்க தொடங்கிவிட்டார்கள். நிலங்களை சுற்றி போடப்பட்டுள்ள இரும்பு வேலிகளில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பாய்ச்சி விடுகிறார்கள். விவசாயிகளுக்கு சோலார் மின்சார வேலி போட்டுக்கொள்ள அனுமதியை கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்.
சோலார் மின்சார வேலி போட்டுக்கொண்டால், ஏதாவது வன விலங்குகள் அதை தாண்டுவதற்காக தொட்டால் சற்று 'ஷாக்' அடிக்குமே தவிர உயிரிழப்பு ஏற்படாது. 'ஷாக்' அடித்தவுடன் பயந்துபோய் அந்த இடத்தைவிட்டு சென்றுவிடும். ஆனால் இதற்கு செலவாகும் என்பதால், பெரும்பான்மையான விவசாயிகள் அதை செய்வதில்லை. கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு இதுபோல தர்மபுரி மாவட்டம் காளிகவுண்டர் கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு விளை நிலத்துக்குள் செல்ல முயன்ற 2 பெண் யானைகளும் ஒரு மக்னா (தந்தம் இல்லாதது) யானையும் வேலியில் பாய்ச்சப்பட்டு இருந்த மின்சாரம் தாக்கி சில வினாடிகளில் உயிரிழந்தன.
உடனடியாக வனத்துறையினர் தகவல் தெரிவித்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த யானைகளுடன் வந்த இரு குட்டி யானைகள் உயிர்தப்பின. ஆனால் பாசப்பிணைப்பால் அந்த குட்டி யானைகள் இறந்துபோன யானைகளை எழுப்புவதற்காக சத்தமாக பிளிறிக்கொண்டேயிருந்தது பரிதாபமாக இருந்தது. இனி அந்த குட்டி யானைகளை வேறு ஏதாவது யானை கூட்டங்களோடு சேர்க்க வனத்துறையினர் முயற்சிக்கிறார்கள். ஆனால் பொதுவாக எந்த யானை கூட்டமும் இதுபோல அன்னிய யானைகளை சேர்ப்பதில்லை. இந்த விவசாய நிலத்தில் இரும்பு வேலி போடப்பட்டு மின்சார வயரில் இருந்து சட்டவிரோதமாக கொக்கிபோடப்பட்டு மின்சாரம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதையொட்டி அந்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இதுபோல மின்சாரம் தாக்கி 89 யானைகள் உயிரிழந்துள்ளன. கோடைக்காலத்தில் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி விடுவதாலும், பசுமையான உணவு இல்லாததாலும் யானைகள் வெளியே வந்து விடுகின்றன. எனவே காடுகளுக்குள் போதிய தண்ணீர் இருக்கும் வகையில் பெரிய தொட்டிகள் அமைத்து அவ்வப்போது தண்ணீர் நிரப்புவதற்கும், அதற்கு தேவையான பசுமை காடுகளை உருவாக்குவதற்கும் வனத்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
காடுகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தினால் நிறைய தண்ணீரை மழைகாலத்தில் தேக்கிவைக்கமுடியும். மேலும் விவசாயிகள் சோலார் மின்சார வேலி போடுவதற்காக நிறைய மானியம் கொடுத்தால் அவர்கள் இவ்வாறு சட்ட விரோதமாக கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி வேலியில் பாய்ச்சமாட்டார்கள் என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஒருவர். இதுமட்டுமல்லாமல் வனப்பகுதிகளை சுற்றி அரசே வேலி போட்டால் விலங்குகளை வனப்பகுதிகளில் இருந்து வெளியே வராமல் தடுக்கமுடியும் என்பதோடு மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளையும் தடுக்கமுடியும். விவசாயிகளுக்கு சோலார் வேலி போடுவதற்கான செலவுகளையும் தவிர்க்கமுடியும்.