38 ஆண்டு கால வரலாற்றை தக்க வைத்த கர்நாடகா தேர்தல் முடிவுகள்

Update:2023-05-15 01:11 IST

கடந்த 10-ந்தேதி கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்துக்கு என பல சிறப்புகள் உண்டு. 224 தொகுதிகள் இங்கு உண்டு. பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும் நீயா... நானா... என்று போட்டியிடும் நேரத்தில், 'நானும் இருக்கிறேன், நீங்கள் 'கிங்' என்றால், நாங்கள்தான் 'கிங் மேக்கர்', என்று கூறும் தேவேகவுடாவின் மத சார்பற்ற ஜனதாதள கட்சியும், சில நேரங்களில் யாருக்கும் தனி 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லையென்றால் இந்த கட்சியின் ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியிருந்தது.

இந்த மாநிலத்தில் என்னதான் கட்சி அரசியல் இருந்தாலும், சாதி அரசியலும் மேலோங்கியிருக்கிறது. அனைத்து கட்சிகளுமே அந்தந்த சாதி பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில், அந்தந்த சமுதாய வேட்பாளர்களையே களத்தில் இறக்கியது. இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் முழுமூச்சாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி 11 முறை இந்த மாநிலத்துக்கு வந்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். 'மத்தியில் பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் நிலையில் கர்நாடகத்திலும் பா.ஜ.க ஆட்சி இருந்தால் இரட்டை என்ஜின் வேகத்தில் மாநிலம் வளர்ச்சியை காணும்', என்று கூறி, இந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் கர்நாடகா அடைந்த நன்மைகளை பட்டியலிட்டார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இங்கேயே முகாமிட்டு, 'ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களுக்கு மேல் 15 இடங்களையாவது பா.ஜ.க பெறும்' என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் அதிக நாட்களை கர்நாடக மாநிலத்தில் செலவழித்தார். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் இங்கு தீவிர பிரசாரம் செய்தனர். இவ்வளவு இருந்தும் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் யாருடைய தயவுமில்லாமல் மிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த சாதனையில் கடந்த தேர்தலில் 78 இடங்களைப் பெற்ற நிலையில், இப்போது 135 இடங்களில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது. இதுபோல முன்பு 104 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்த பா.ஜ.க இப்போது 66 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பெரிய சரிவை கண்டுள்ளது. இதில் மத சார்பற்ற ஜனதாதளம்தான் யாரும் கண்டுகொள்ள அவசியம் இல்லாத வகையில் 19 இடங்களில்தான் வெற்றியை பெற்றுள்ளது. பா.ஜ.கவும், மத சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி வைத்தால் கூட ஆட்சியை அமைக்க முடியாது.

கடந்த 34 ஆண்டுகளாக எந்த கட்சியும் இவ்வளவு அதிக தொகுதிகளில் வெற்றிபெறவில்லை. இவ்வளவு அதிக ஓட்டு சதவீதத்தையும் பெறவில்லை என்ற சாதனையை காங்கிரஸ் படைத்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் 0.2 சதவீதம் தான் குறைந்திருக்கிறது. காங்கிரசுக்கு வெற்றி எதிர்பார்த்தது என்றாலும், இவ்வளவு பெரிய வெற்றி எதிர்பாராத ஒன்றாகும். பா.ஜ.க.வுக்கு இது எதிர்பாராத தோல்வி.

கர்நாடகத்தில் கடந்த 38 ஆண்டுகளாக ஒரு முறை ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் அடுத்த முறை ஆட்சி செய்த வரலாறு இல்லை. அந்த வரலாறு இப்போது காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதன் மூலம் நிலை நாட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில் கர்நாடகத்தில் வரலாறு மாறவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்