சென்னையில் 2 ஐபோன் தொழிற்சாலைகள்

ஆப்பிள் நிறுவனம் செல்போன் பயன்பாட்டிலுள்ள ஏர்பாட் மற்றும் ஹெட்போன் உற்பத்தியையும் இந்தியாவில் தொடங்க முடிவு எடுத்த நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் ஹெட்போன்களை உற்பத்தி செய்யப்போகிறது.

Update: 2022-10-13 19:00 GMT

டெலிபோன் என்பது ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாகவும், ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவும் இருந்தது. ஆனால் 1995-ம் ஆண்டு செல்போன் புழக்கத்திற்கு வந்து, இன்றைக்கு அது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அங்கமாகிவிட்டது. பாமர மக்களில் இருந்து பெரும் பணக்காரர்கள் வரை, ஒவ்வொருவரின் கையிலும் நிச்சயமாக இருப்பது செல்போன்தான். சமீபத்தில் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வுப்படி, இந்தியாவில் 93 சதவீத வீடுகளில் செல்போன் இருக்கிறது. இதில் நகர்ப்புறங்களில் 96 சதவீத வீடுகளிலும், கிராமப்புறங்களில் 91 சதவீத வீடுகளிலும் செல்போன் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

டெலாயிட் கணக்கெடுப்புப்படி 2026-ம் ஆண்டில் இந்தியாவில் 100 கோடி பேர் கையில் ஸ்மார்ட் போன் இருக்கும். ஆக, இப்போதும் சரி, வருகிற ஆண்டுகளிலும் சரி, ஸ்மார்ட் போன் தேவை மிக அதிக அளவில் இருக்கும். தொடக்க காலங்களில், வெளிநாடுகளில் இருந்துதான் செல்போன் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. அண்மையில் சென்னை வந்திருந்த மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன்மேம்பாட்டு இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர், "2015-2016-ல் இந்தியாவிலிருந்து ஒரு செல்போன்கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை. ஆனால், இப்போது ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. செல்போனுக்காக இறக்குமதியை நம்பவேண்டிய தேவை இப்போது இல்லை. இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன்களில் 97 சதவீத செல்போன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது" என்றார்.

செல்போன் உற்பத்தியில் தமிழ்நாடு முத்திரை பதித்து வருகிறது. தொடக்க காலத்தில் அனைவரும் பயன்படுத்திவந்த நோக்கியா செல்போன் சென்னைக்கு அருகில்தான் உற்பத்தி செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, சில பல காரணங்களால் அந்த தொழிற்சாலையில் உற்பத்தி இல்லை. இப்போது ஐபோன்களுக்கு கடும் கிராக்கி இருக்கிறது. சீனாவில்தான் ஐபோன் உற்பத்தி பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது. அதிலும் ஆப்பிள் ஐபோனில் புது மாடல் வருகிறது என்றால், சினிமா தியேட்டரில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆன அன்று எப்படி ரசிகர்கள் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் வாங்குவார்களோ, அதுபோல அமெரிக்காவில் முதல் நாளிலேயே வாங்கிவிட வேண்டும் என்று நீண்ட வரிசையில் நின்று வாங்குவார்கள்.

இப்போது ஆப்பிள் ஐபோன்-14 கடந்த மாதம் 7-ந்தேதி விற்பனைக்கு வந்துள்ளது. செப்டம்பர் 16-ந்தேதி இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த செல்போன் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக, சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தைவான் நாட்டு நிறுவனமான பாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் ஐபோன்-14 உற்பத்தி தொடங்கியது.

சீனாவையே ஐபோன் உற்பத்திக்காக நம்பியிருந்த ஆப்பிள் நிறுவனம், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் நிர்வாகத்தோடு ஏற்பட்ட மோதலால் இந்தியாவுக்கு மாற்ற முடிவெடுத்தது. பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், கடந்த மாதம் 23-ந்தேதி ஏற்றுமதியையும் தொடங்கிவிட்டது. செல்போன்களுக்கு தேவையான உதிரிபாகங்களை டாட்டா நிறுவனம் ஓசூரில் தயாரிக்க இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், சென்னையை அடுத்த சிங்கபெருமாள் கோவில் மகேந்திரா சிட்டியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த தைவான் நாட்டை சேர்ந்த பெகாட்ரான் தொழிற்சாலையிலும் ஐபோன் உற்பத்தி தொடங்கியுள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனம் செல்போன் பயன்பாட்டிலுள்ள ஏர்பாட் மற்றும் ஹெட்போன் உற்பத்தியையும் இந்தியாவில் தொடங்க முடிவு எடுத்த நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் ஹெட்போன்களை உற்பத்தி செய்யப்போகிறது. தமிழ்நாட்டில் இப்போது 5 பெரிய மின்னணு நிறுவனங்கள் இருக்கின்றன. சீனாமட்டுமல்ல, தமிழ்நாடும் செல்போன்களின் உற்பத்தி மையமாக திகழவேண்டும். அதற்கு தமிழக அரசு விரைவில் வெளியிடப்போகும் மின்னணு வன்பொருள் கொள்கை பேருதவியாக இருக்கும். மொத்தத்தில் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் செல்போன்கள் உலகம் முழுவதிலும், பல நாடுகளில் உள்ளவர்களின் கைகளில் தவழப்போகிறது என்பது தமிழகத்துக்கு பெருமை.

Tags:    

மேலும் செய்திகள்