அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ரடுகானு அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் எம்மா ரடுகானு அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

Update: 2022-08-31 22:12 GMT

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 2-வது நாளிலும் சில அதிர்ச்சி தோல்விகள் நிகழ்ந்தன.

பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானு (இங்கிலாந்து), 40-ம் நிலை வீராங்கனையான அலிசே கோர்னெட்டை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இதில் அனுபவம் வாய்ந்த கோர்னெட் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ரடுகானுவை விரட்டினார். 19 வயதான ரடுகானு கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டி ஒரு செட்டை இழக்காமல் மகுடம் சூடி புதிய வரலாறு படைத்து வியப்பூட்டினார். ஆனால் இந்த சீசனில் முதல் சுற்றை கூட தாண்டாமல் மூட்டையை கட்டியிருக்கிறார்.

அவரை வீழ்த்திய 32 வயதான அலிசே கோர்னெட் இடைவிடாது தொடர்ச்சியாக பங்கேற்ற 63-வது கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவாகும். அவர் அடுத்து செக்குடியரசின் கேத்ரினா சினியகோவாவை சந்திக்கிறார்.

2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜப்பானின் நவோமி ஒசாகாவும் முதல் தடையை தாண்டவில்லை. அவரை அமெரிக்காவின் டேனியலி காலின்ஸ் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். இதே போல் முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 6-7 (5-7) என்ற நேர் செட்டில் அலிசன் வான் உட்வானிக்கிடம் (பெல்ஜியம்) பணிந்தார்.

மற்றபடி ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் தங்களது முதலாவது சுற்றில் வெற்றியை ருசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்