எனக்கு பிடித்த பேட் திருடு போய் விட்டது: ரபேல் நடால் புகாரால் பரபரப்பு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின்போது, தனது டென்னிஸ் பேட் திருடு போய் விட்டது என ரபேல் நடால் புகார் அளித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.;
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியின் தொடக்க ஆட்டம் மெல்போர்ன் நகரில் இன்று நடந்தது. ஆட்டத்தின்போது, நடப்பு சாம்பியனான ரபேல் நடால், தனது விருப்பத்திற்குரிய பேட் காணாமல் போய் விட்டது என்றும் பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்று விட்டான் எனவும் புகாராக கூறியுள்ளார்.
இதனால், போட்டி தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அது சர்வதேச பரபரப்பு செய்தியாகவும் மாறியது. போட்டி பாதிக்கப்பட்டது பற்றி ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில், பொறுமை இழந்த நடால் தனது டென்னிஸ் பேட்டை தேடி பார்க்கிறார். எனக்கு, எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என கூச்சலிடுகிறார்.
இதன்பின்னர் அது கிடைக்காமல் போகவே, வழியின்றி வேறொரு டென்னிஸ் பேட்டை எடுத்து கொண்டு நடால் விளையாட சென்றார். அதன்பின் போட்டி தொடர்ந்தது. எனினும், போட்டியில் ஜாக் டிரேபருக்கு எதிராக கடுமையாக போராடி 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மூன்றரை மணிநேரம் நீடித்த இந்த போட்டியில் பெற்ற வெற்றியானது, நடப்பு ஆண்டில் நடாலுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.