டேவிஸ் கோப்பை டென்னிஸ்: மொராக்கோவை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம் - ரோகித் ராஜ்பால்
ஒற்றையர் பிரிவில் ஆடுவதற்கு சுமித் நாகல், சசி முகுந்த், திக்விஜய் பிரதாப் சிங் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.;
லக்னோ,
டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் 2 சுற்றில் இந்தியா- மொராக்கோ அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் லக்னோவில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது. இந்திய மூத்த வீரர் ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை ஆட்டமாகும். அவர் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ரியுடன் இணைந்து விளையாடுகிறார். ஒற்றையர் பிரிவில் ஆடுவதற்கு சுமித் நாகல், சசி முகுந்த், திக்விஜய் பிரதாப் சிங் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இதையொட்டி களம் இறங்காமல் அணியை வழிநடத்தும் இந்திய கேப்டன் ரோகித் ராஜ்பால் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'நாங்கள் வலுவான நிலையில் இருக்கிறோம். ஆனாலும் மொராக்கோவை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். கடந்த 3 நாட்களாக இங்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். காற்றில் ஈரப்பதம் குறைவு காரணமாக கடுமையான புழுக்கத்தில் வியர்த்து கொட்டுகிறது. ஒதுங்கி நின்றபடி பயிற்சியை பார்க்கும் போது கூட வியர்வையால் உடல் நனைந்து விடுகிறது. அதனால் தான் இரு அணியினரின் ஒப்புதலோடு போட்டிக்கான நேரத்தை மாற்றினோம்' என்றார்.
ஒற்றையர் தரவரிசையில் சுமித் நாகல் 156-வது இடத்திலும், மொராக்கோவின் எலியாட் பென்செ பென்செட்ரிட் 465-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி நாளைய தினம் ஆட்டம் பகல் 12 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் காலை 11 மணிக்கு பதிலாக பகல் 1 மணிக்கும் தொடங்கி நடைபெறும்.