சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல்: ஜோகோவிச் முதலிடத்தில் நீடிப்பு

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ், 'நம்பர் ஒன்' வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

Update: 2024-03-18 22:50 GMT

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், 4-ம் நிலை வீரரான டேனில் மெட்விடேவை (ரஷியா) எதிர்கொண்டார்.

முதல் செட்டில் கடும் சவால் அளித்த மெட்விடேவ், அடுத்த செட்டில் தடுமாற்றம் கண்டார். முடிவில் அல்காரஸ் 7-6 (7-5), 6-1 என்ற நேர்செட்டில் மெட்விடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார். இந்த வெற்றியை ருசிக்க அவருக்கு 1 மணி 42 நிமிடம் தேவைப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியில் வாகை சூடிய 20 வயதான அல்காரஸ் அதன் பிறகு வென்ற முதல் பட்டம் இதுவாகும். ஜோகோவிச்சுக்கு (2014-16) பிறகு இண்டியன்வெல்சில் தொடர்ச்சியாக 2-வது முறை பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை அல்காரஸ் பெற்றார்.

வெற்றிக்கு பிறகு அல்காரஸ் கூறுகையில், 'இந்த வெற்றி எனக்கு முக்கியமானது. கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்த என்னால் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. இதனால் பதற்றம் அடைந்தேன். எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நன்றாக விளையாடி வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி அடுத்து வரும் போட்டிக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கும்' என்றார்.

முன்னதாக நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் மரியா சக்காரியை (கிரீஸ்) 68 நிமிடத்தில் விரட்டியடித்து 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை வசப்படுத்தினார். ஏற்கனவே ஸ்வியாடெக் 2022-ம் ஆண்டு இறுதி சுற்றிலும் சக்காரியை சாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1000 தரவரிசை புள்ளி கொண்ட இத்தகைய போட்டியில் ஸ்வியாடெக் பட்டம் வெல்வது இது 8-வது முறையாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 19-வது சர்வதேச பட்டமாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், ஸ்வியாடெக் ஆகியோருக்கு தலா ரூ.9 கோடியே 12 லட்சமும், 2-வது இடம் பெற்ற மெட்விடேவ், சக்காரிக்கு தலா ரூ.4 கோடியே 85 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட போதிலும் ஜோகோவிச் (செர்பியா) முதலிடத்தில் தொடருகிறார். அல்காரஸ் 2-வது இடத்திலும், அரைஇறுதியில் தோற்ற ஜானிக் சினெர் (இத்தாலி) 3-வது இடத்திலும், மெட்விடேவ் 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஜெர்மனி வீரர் அலக்சாண்டர் ஸ்வெரேவ், ஆந்த்ரே ரூப்லெவை (ரஷியா) பின்னுக்கு தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் முறையே டாப்-5 இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர். இறுதிப்போட்டியில் தோற்ற மரியா சக்காரி 9-வது இடம் வகிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்