விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு...!
இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.;
டெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், பிரிஜ் பூஷணை கைது செய்ய கோரி கோரிக்கை முன்வைத்தனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.
இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்து வலியுறுத்தினர். அதேவேளை, பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால் போராட்டத்தை முன்னின்று நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.
இந்நிலையில் புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி மாலிக், இன்னும் எழுத்து பூர்வமாக நான் எதையும் பார்க்கவில்லை. சஞ்சய் சிங் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டாரா அல்லது மற்றவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்களா என்பது எனக்கு தெரியாது, என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் தனது விருதுகளை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது, ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ்க்கையை வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாகிவிடக் கூடாது என்பதால் நான் வாங்கிய விருதுகளை திரும்ப அளிக்கிறேன், என்று கூறியுள்ளார்.