உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கலா ?

உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.;

Update:2023-10-06 09:27 IST

ஆமதாபாத்,

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்திய அணி வரும் 8-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சுப்மன் கில் நல்ல பார்மில் இருந்தார். உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்