ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக ரந்தீர் சிங் தேர்வு
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;
புதுடெல்லி,
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு பிரதிநிதிகளுடன் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவும் கலந்து கொண்டார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான 77 வயதான ரந்தீர்சிங் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த அவர் இப்போது முழுநேர தலைவராகி உள்ளார். ஓ.சி.ஏ.யின் தலைவர் பதவியை ஏற்கும் முதல் இந்தியர் ரந்தீர் தான். 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரான ரந்தீர்சிங் பஞ்சாப் மாநில பாட்டியாலாவைச் சேர்ந்தவர். ரந்தீர்சிங் ஓ.சி.ஏ. தலைவராக 2028-ம் ஆண்டு வரை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.