புரோ கபடி லீக்; முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதல்
புரோ கபடி லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் கபடியை பிரபலப்படுத்தும் வகையில் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 10 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த தொடரின் கடைசி சீசனில் புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில், நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கும் 11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் 18-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
மொத்தம் 3 நகரங்களில் இந்த தொடர் நடத்தப்படுகிறது. முதல் பகுதி ஆட்டங்கள் ஐதராபாத்தில் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரையும், 2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவில் நவம்பர்10-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரையும், 3-வது பகுதி லீக் ஆட்டங்கள் புனேயில் டிசம்பர் 3-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து நடைபெறும் 2வது ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோத உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸை அக்டோபர் 19ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.