பாரீஸ் ஒலிம்பிக்: தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-21 03:03 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. 200 நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவை செயின் நதியில் நடத்த போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதாவது தொடக்க விழாவின் முக்கிய அம்சமான வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு படகில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் படகில் 6 கிலோமீட்டர் தூரம் ஈபிள் கோபுரம் நோக்கி பயணிக்க இருக்கிறார்கள். 45 நிமிடங்கள் இந்த அணிவகுப்பு நடைபெற உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

தொடக்க விழாவில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் குண்டு சத்தம் ஓயவில்லை. ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவாக இருந்து வருகிறது. போர் குற்றத்துக்காக இவ்விரு நாட்டு வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளில் தங்கள் நாட்டு கொடியின் கீழ் இல்லாமல் பொதுவான நபர்கள் என்ற பெயரிலேயே விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து லாசானேவில் நேற்று நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் கலாசார சிறப்புமிக்க ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்புக்கு ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

அதே சமயம் இந்த அனுபவத்தை அவர்களும் பெறும் வகையில் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ரஷியாவில் இருந்து 36 பேரும், பெலாரசில் இருந்து 22 பேரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள ஒலிம்பிக் கமிட்டி, அவர்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்ள அனுமதி உண்டா என்பது பிறகு முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்