கேலோ இந்தியா விளையாட்டு: தமிழகத்திற்கு மேலும் இரு தங்கப்பதக்கம்

3-வது நாள் முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 4 தங்கம், 2 வெண்கலம் என்று 6 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது.;

Update:2024-01-22 01:30 IST

சென்னை,

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 26 வகையான போட்டிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலான பந்தயங்கள் சென்னையிலேயே நடக்கிறது.

3-வது நாளான நேற்று தமிழகம் மேலும் இரு தங்கப்பதக்கத்தை வென்று பிரமாதப்படுத்தியது. எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த யோகாசனப் போட்டியின் கலாசார பிரிவில் தமிழக வீராங்கனை நவ்யா 64.75 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த நவ்யா பிளஸ்-1 படிக்கிறார். மேற்கு வங்காளத்தின் அரன்யா ஹூதாய்த் வெள்ளிப்பதக்கமும் (64.42 புள்ளி), ரிது மோன்டல் (63.5 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

இதே போல் வாள்வீச்சு போட்டியில் சிறுவர்களுக்கான சாப்ரே பிரிவின் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் அர்லின் 15-14 என்ற புள்ளி கணக்கில் அரியானாவின் லக்ஷயா பட்சரை வீழ்த்தி தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். 10-ம் வகுப்பு படிக்கும் அர்லின் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

கபடியில் ஆண்களுக்கான அரைஇறுதியில் தமிழக அணி 23-41 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது. மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் அரியானா 45-28 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தை வென்றது. இதன் பெண்கள் பிரிவில் தமிழக அணி 38-31 என்ற புள்ளி கணக்கில் இமாசலபிரதேசத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரங்கேறிய ஜூடோவில் தமிழகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பெண்களுக்கான 40 கிலோ பிரிவில் சண்டிகாரின் சப்னா, 44 கிலோ பிரிவில் குஜராத்தின் அங்கீதா, 48 கிலோ பிரிவில் டெல்லியின் தன்னு மான், ஆண்களில் 50 கிலோ பிரிவில் பஞ்சாப்பின் ஷிவன்ஷ் வசிஷ்த், 55 கிலோ பிரிவில் டெல்லியின் அனுராக் சாகர் ஆகியோர் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

ஆண்களுக்கான ஆக்கியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் 1-6 என்ற கோல் கணக்கில் ஒடிசாவிடம் தோற்றது. இதன் பெண்கள் பிரிவிலும் சொதப்பிய தமிழக அணி 0-6 என்ற கோல் கணக்கில் சத்தீஷ்காரிடம் பணிந்தது.

கோவையில் நடக்கும் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி தனது முதல் லீக்கில் 99-72 என்ற புள்ளி கணக்கில் (பி பிரிவு) கர்நாடகாவை சாய்த்தது. பெண்கள் தமிழக அணி 109-45 என்ற புள்ளி கணக்கில் (ஏ பிரிவு) சண்டிகாரை பந்தாடியது.

3-வது நாள் முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 4 தங்கம், 2 வெண்கலம் என்று 6 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்