பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதிய இறுதிப்போட்டியின் 2-வது சுற்றும் 'டிரா' - சாம்பியனை முடிவு செய்ய இன்று 'டைபிரேக்கர்'

உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2-வது சுற்றும் 'டிரா'வில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் நடக்கிறது.;

Update: 2023-08-23 23:52 GMT

image courtesy: FIDE twitter via ANI

பாகு,

'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் வெற்றி பெறும் வீரர் உலக சாம்பியன் ஆகிவிடுவார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.

பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். சாதுர்யமாக காய்களை நகர்த்தி அசத்திய பிரக்ஞானந்தாவுக்கு எதிராளியிடம் இருந்து பெரிய அளவில் நெருக்கடி எதுவும் வரவில்லை. 11-வது நகர்த்தலுக்குள் ராணியையும், இரு குதிரையையும் இருவரும் பரஸ்பரமாக 'வெட்டு' கொடுத்தனர். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று (வியாழக்கிழமை) டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு 'ரேபிட்' முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் விளையாடுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும்.

டைபிரேக்கரில் சட்டென்று யோசித்து மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்த வேண்டும். அரைஇறுதியில் பிரக்ஞானந்தா டைபிரேக்கரில் தான் அமெரிக்காவின் பேபியானா காருவானாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அதனால் அதிவேகமாக காய்களை நகர்த்தும் யுக்தி அவருக்கு சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.91 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.66 லட்சமும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்று கோளாறினால் அவதிப்பட்ட கார்ல்சென் ஆட்டம் முடிந்த பிறகு கூறுகையில், 'பிரக்ஞானந்தா ஏற்கனவே பலமிக்க வீரர்களுக்கு எதிராக பல டைபிரேக்கர்களில் மோதி இருக்கிறார். அவர் மிகவும் வலுவான எதிராளி என்பதை அறிவேன். நல்ல உடல்தகுதியுடன் இருந்து, சாதகமான நாளாக அமைந்தால் எனக்கு வெற்றி வாய்ப்பு உண்டு. டாக்டர்கள், நர்ஸ்கள் எனக்கு சிறப்பாக சிகிச்சை அளித்தனர். அதற்காக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், செஸ் சம்மேளனத்துக்கு நன்றிகடன் பட்டுள்ளேன்.

முந்தைய நாளை விட கொஞ்சம் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். என்றாலும் களத்தில் முழுமையாக போராடுவதற்கு உரிய ஆற்றலுடன் நான் இல்லை. இப்போது மேலும் ஒரு நாள் கிடைத்து இருக்கிறது. நாளைய தினம் (இன்று) இன்னும் கூடுதல் பலத்துடன் இறங்குவேன் என்று நம்புகிறேன்' என்றார்.

18 வயதான பிரக்ஞானந்தா கூறுகையில், 'இவ்வளவு விரைவாக கார்ல்சென் டிராவுக்கு விளையாடுவார் என்று நினைக்கவில்லை. அவர் விளையாடிய விதம் டிரா செய்யும் நோக்குடன் இருப்பதை புரிந்து கொண்டேன். எனக்கும் அது நல்லது தான். நாளைய தினம் (இன்று) வெற்றிக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். அதன் பிறகே ஓய்வு எடுப்பேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்