பெடரேசன் கோப்பை: ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
பெடரேசன் கோப்பை ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில், நிகில் பரத்வாஜ் வெள்ளி பதக்கமும், தவால் மகேஷ் உதேகர் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில், இந்தியாவின் சந்தோஷ் குமார் கலந்து கொண்டார்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றவரான அவர், இந்த போட்டியில் 50.04 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து, முதல் இடம் பெற்றார்.
இந்த பிரிவில், 48.80 வினாடிகள் என்பது இந்தியாவின் தேசிய சாதனையாக உள்ளது. 2019-ம் ஆண்டு பாட்டியாலா நகரில் நடந்த பெடரேசன் கோப்பை போட்டியின்போது, அய்யாசாமி தருண் என்பவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில், நிகில் பரத்வாஜ், 50.92 வினாடிகளில் இலக்கை அடைந்து, வெள்ளி பதக்கம் வென்றார். தவால் மகேஷ் உதேகர் 51.13 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.