பெடரேசன் கோப்பை: பெண்களுக்கான குண்டு எறிதலில் தேசிய சாதனை படைத்த ஆபா கட்டுவா

பெடரேசன் கோப்பை பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கிரண் பலியன் வெள்ளி பதக்கமும், சிருஷ்டி விக் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.;

Update:2024-05-14 20:39 IST

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பெண்களுக்கான குண்டு எறிதலில் வீராங்கனை ஆபா கட்டுவா (வயது 26) தங்கம் வென்று தேசிய சாதனை படைத்துள்ளார்.

அவர், 18.41 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஆபா, பாங்காக் நகரில் 2023-ம் ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 18.06 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து, சாதனை படைத்து, அதனை மன்பிரீத் கவுர் உடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில், அதனை ஆபா முறியடித்துள்ளார். ஒலிம்பிக்கில் தகுதி பெற 18.80 மீட்டர் என்ற தொலைவுக்கு குண்டு எறிய வேண்டும். அதனை விட சற்று குறைவான தொலைவுக்கு குண்டு எறிந்த போதும், 2024 தரவரிசையில் அவர் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த போட்டியில், 16.54 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்த கிரண் பலியன் வெள்ளி பதக்கமும், 15.86 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்த சிருஷ்டி விக் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்