கோவை ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் செல்போன் சிக்னல் நீலகிரியில் காட்டியதால் தீவிர சோதனை
கோவையில் கோர்ட்டு வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளின் செல்போன் சிக்னல் நீலகிரியில் காட்டியதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
ஊட்டி
கோவையில் கோர்ட்டு வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளின் செல்போன் சிக்னல் நீலகிரியில் காட்டியதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
ரவுடி ஓட ஓட விரட்டி கொலை
கோவை மாவட்டம் கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22). இவர் மீது துடியலூர், சரவணம்பட்டி, கோவில்பாளையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக தனது நண்பர் மனோஜ் என்பவருடன் கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய போது, கோர்ட்டின் பின்புறம் 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கோகுலை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டது.
வாகன சோதனை
கோர்ட்டு பகுதியில் நடந்த இந்த சம்பவம் காரணமாக கோவையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இருந்த இந்த சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரது செல்போன் சிக்னல் நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுப்புற பகுதியில் காட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களைப் பிடிக்க நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் பஸ்களில் ஏறி சந்தேகப்படும்படியாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரின் செல்போன் சிக்னலும் அவருடன் தொடர்புடைய மற்றொருவரின் செல்போன் சிக்னலும் இங்கு காட்டியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று இரவு முதல் சோதனை நடந்து வருகிறது, இந்த பணியில் சுமார் 600 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்றார்.