மாநிலங்களையே ஒழிக்கத்தான் 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டம் வழிவகுக்கும்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி

பேராபத்தான இத்திட்டத்தை நமது முதல்-அமைச்சர் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.;

Update:2024-12-12 20:21 IST

கோப்புப்படம்

சென்னை,

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மாநிலங்களையே ஒழிக்கத் தான் 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டம் வழிவகுக்கும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

'ஒரே நாடு - ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.

மத்தியிலும், மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்கு களம் அமைக்கும் சதித்திட்டம் இது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை கவர்னர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது.

இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்க தான் 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டம் வழிவகுக்கும்.

பேராபத்தான இத்திட்டத்தை நமது கழகத் தலைவர் - முதல்-அமைச்சரின் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்!!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்