ஆசிய விளையாட்டு போட்டி கோலாகல நிறைவு - பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடம்
ஆசிய விளையாட்டு போட்டி நேற்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.;
ஹாங்சோவ்,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 23-ந்தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த 12,407 வீரர், வீராங்கனைகள் 40 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் 661 வீரர்களும் அடங்குவர். வழக்கம் போல் பதக்கவேட்டையில் சீனாவின் கையே ஓங்கியது. தொடர்ந்து 11-வது ஆண்டாக அந்த நாடு பதக்கப்பட்டியலில் 'நம்பர் ஒன்' இடத்தை ஆக்கிரமித்தது.
இந்த முறை இந்தியாவும் கணிசமான பதக்கங்களை குவித்து அமர்க்களப்படுத்தியது. தடகளத்தில் 6 தங்கம், 14 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கமும், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கமும், வில்வித்தையில் 9 பதக்கமும் அள்ளியது. கபடி, கிரிக்கெட்டில் இரு பிரிவிலும் இந்தியா வாகை சூடியது. வில்வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா, வீரர் ஓஜாஸ் பிரவீன் டியோடேல் 'ஹாட்ரிக்' தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தனர். அதே சமயம் குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் இந்த முறை தங்கம் இல்லாதது ஏமாற்றம் அளித்தது.
பதக்கப்பட்டியலில் முதல்முறையாக 100-ஐ தாண்டி சரித்திரம் படைத்த இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என்று மொத்தம் 107 பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்தது. ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு இதுவாகும்.
கடைசி நாளான நேற்று நீச்சலில் இசைக்கேற்ப நடனம் மற்றும் கராத்தே பந்தயங்கள் மட்டுமே நடந்தது. இதில் இந்தியர்கள் யாரும் கிடையாது. சீனா, சீனதைபே, ஜப்பான் ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கம் வென்றன. சீனா 201 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம் என்று மொத்தம் 383 பதக்கங்களுடன் முதலிடத்தை சொந்தமாக்கியது. அந்த நாடு தங்கத்தில் இரட்டை செஞ்சுரி அடித்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஆசிய விளையாட்டில் மொத்தம் 13 உலக சாதனைகளும், 26 ஆசிய சாதனைகளும், 97 போட்டி சாதனைகளும் படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதைத் தொடர்ந்து இரவில் தாமரைப்பூ வடிவிலான ஹாங்சோவ் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் லேசர் ஒளிவெள்ளத்துக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா கோலாகலமாக அரங்கேறியது.
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் சிலிர்ப்பூட்டும் நடனங்கள் ரசிகர்களை கிறங்கடித்தன. அணிகளின் அணிவகுப்பில் இந்திய அணிக்கு ஆக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தலைமை தாங்கினார். அவர் தேசிய கொடியுடன் முன்செல்ல மற்ற வீரர்கள் உற்சாகமாக பின்தொடர்ந்து வந்தனர்.
இறுதியாக 2026-ம் ஆண்டு ஆசிய விளையாட்டை நடத்தும் ஜப்பானிடம், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கொடியை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் இடைக்கால தலைவர் இந்தியாவின் ரனதீர் சிங் வழங்கியதுடன் போட்டி முடித்து வைக்கப்பட்டது.