கேலோ இந்தியா விளையாட்டில் தமிழகத்திற்கு ஒரே நாளில் 6 தங்கம்: இன்று நிறைவு விழா
கடந்த 19-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்று நிறைவு பெறுகிறது.;
சென்னை,
டென்னிசில் இரட்டை தங்கம்
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குபட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டி விட்ட இந்த விளையாட்டு திருவிழாவில் 12-வது நாளான நேற்று தமிழகம் மேலும் 6 தங்கப்பதக்கத்தை அறுவடை செய்து அசத்தியது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் இறுதிசுற்றில் தமிழகத்தின் பிரனவ்- மகாலிங்கம் ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட்டில் மராட்டியத்தின் தனிஷ்க் முகேஷ் யாதவ்- காஹிர் சமீர் இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை ருசித்தது. பெண்கள் இரட்டையர் பிரிவிலும் தமிழகம் வாகை சூடியது. இதில் ரேவதி- லட்சுமி பிரபா கூட்டணி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் கர்நாடகாவின் சுஹிதா- ஸ்ரீநிதி இணையை வீழ்த்தியது.
பளுதூக்குதலில் பெண்களுக்கான 81 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் ஆர்.பி. கீர்த்தனா ஸ்னாட்ச் முறையில் 85 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 103 கிலோ என மொத்தம் 188 கிலோ தூக்கி புதிய தேசிய சாதனையுடன் முதலிடத்தை பிடித்தார். மற்றொரு தமிழக வீராங்கனை ஓவியா 184 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் வினயக்ராம்- ஸ்வஸ்திக் ஜோடியினர் 21-18, 21-18 என்ற நேர் செட்டில் டெல்லியின் பாவ்யா சப்ரா- பராம் சவுத்ரி இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். இதன் ஒற்றையர் பிரிவில் லக்ஷ் செங்கப்பா (கர்நாடகா), அன்ஷ் நெகி (உத்தரகாண்ட்), மிதேஷ் (தமிழ்நாடு) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தை பெற்றனர்.
நீச்சலில் ஸ்ரீநிதிக்கு 4-வது பதக்கம்
வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடந்த நீச்சல் போட்டியில், ஆண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் சென்னையைச் சேர்ந்த நித்திக் நாதெல்லா 2 நிமிடம் 04.50 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். 12-ம் வகுப்பு மாணவரான நித்திக் நடப்பு தொடரில் குவித்த 4-வது பதக்கம் இதுவாகும்.
பெண்களுக்கான 200 மீட்டர் மெட்லே பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன் 2 நிமிடம் 26.78 வினாடிகளில் முதலாவதாக நீந்தி வந்து தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார். ஏற்கனவே 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றிருந்த ஸ்ரீநிதிக்கும் இது 4-வது பதக்கமாகும். சேலத்தை சேர்ந்த ஸ்ரீநிதி 8-ம் வகுப்பு படிக்கிறார்.
அதே சமயம் வில்வித்தையில் தமிழகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதில் மராட்டியம், பஞ்சாப், அரியானா வீரர், வீராங்கனைகள் வெற்றிக்கொடியை நாட்டினர்.நேற்றைய முடிவில் நடப்பு சாம்பியன் மராட்டியம் 53 தங்கம் உள்பட 149 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழக அணி 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.
இன்றுடன் நிறைவு
கடந்த 19-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்று நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் கால்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் ஆகிய 4 விளையாட்டுகள் நடைபெறுகிறது.
நிறைவு விழா மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்.