10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம்: 16 ஆண்டுகால தேசிய சாதனையை தகர்த்தார் குல்வீர் சிங்
குல்வீர் சிங் 27 நிமிடம் 41.81 வினாடிகளில் இலக்கை கடந்து 16 ஆண்டுகால தேசிய சாதனையை தகர்த்தார்.;
கலிபோர்னியா,
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 'தி டென்' என்ற பெயரில் சர்வதேச தடகள போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்றில் கலந்து கொண்ட இந்தியாவின் குல்வீர் சிங் 27 நிமிடம் 41.81 வினாடிகளில் இலக்கை கடந்து தனது பிரிவில் 2-வது இடம் பிடித்தார்.
அவரது ஓட்டம் இந்திய அளவில் புதிய தேசிய சாதனையாக பதிவானது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு சுரேந்திர சிங் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 28 நிமிடம் 02.89 வினாடிகளில் இலக்கை கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த 16 ஆண்டுகால தேசிய சாதனையை குல்வீர்சிங் தகர்த்தார். இருப்பினும் 41 வினாடி கூடுதலாக எடுத்துக் கொண்டதால் ஜூலை மாதம் நடக்கவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவற விட்டார்.
இதன் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 20-வது இடத்திற்கு தள்ளப்பட்டு ( 32 நிமிடம் 02.08 வினாடி) ஏமாற்றம் அளித்தார்.