13 ஆண்டுகளாக பதவி வகித்த ஹாக்கி இந்தியா சி.இ.ஓ. எலினா நாரிமன் ராஜினாமா

ஹாக்கி இந்தியா நிர்வாகத்தில் ஏற்பட்ட பிளவு போன்ற காரணங்களால் தனது பணி மிகவும் கடினமாக இருந்ததாக எலினா நாரிமன் குற்றம்சாட்டினார்.;

Update:2024-02-27 16:44 IST

புதுடெல்லி:

ஹாக்கி இந்தியா அமைப்பில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த தலைமை நிர்வாக அதிகாரி எலினா நார்மன் (வயது 49) இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 13 ஆண்டுகளாக பதவி வகித்த எலினா நார்மனுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சம்பளம் நிறுத்தி வைப்பு மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிளவு போன்ற காரணங்களால் தனது பணி மிகவும் கடினமாக இருந்ததாகவும் எலினா நார்மன் குற்றம்சாட்டினார்.

தனது முடிவு குறித்து எலினா நார்மன் மேலும் கூறியதாவது:-

சம்பளம் தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்தன. தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு கடந்த வாரம் அதற்கு தீர்வு கிடைத்தது. ஹாக்கி இந்தியாவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவில் தலைவர் திலீப் திர்கேவும் நானும் இருக்கிறோம். அங்கே செயலாளர் போலாநாத் சிங், செயல் இயக்குநர் சி.டி.ஆர். ஆர் கே ஸ்ரீவஸ்தவா மற்றும் பொருளாளர் சேகர் ஜே.மனோகரன் ஆகியோர் உள்ளனர். இரு பிரிவினருக்கு இடையே நடந்த சண்டையை சமாளித்து என் பணியை செய்வது கடினமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான்னக் ஸ்கோப்மேன் பதவி விலகினார். ஹாக்கி இந்தியா அமைப்பு தனக்கு மதிப்பு மரியாதை அளிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். கடினமான பணிச்சூழல் குறித்தும் புகார் கூறியிருந்தார். அவர் பதவி விலகிய சில நாட்களில், நார்மன் பதவி விலகி உள்ளார். இது ஹாக்கி இந்தியா அமைப்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

எலினா நார்மனின் ராஜினாமாவை ஹாக்கி இந்தியா தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான திலிப் திர்கே ஏற்றுக்கொண்டார். மேலும், இதுவரை ஹாக்கி இந்தியா தலைமை அதிகாரியாக அவர் செய்த பணிகளை பாராட்டி நன்றி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எலினா நார்மன், விளையாட்டு நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 2007ல் இந்தியா வந்தார். 2011-ல் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்