ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றி
நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணிகள் மோதின.;
ரூர்கேலா,
6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த தமிழ்நாடு டிராகன்ஸ், வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணிகள் இடையிலான திரில்லிங்கான ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட ஷூட்-அவுட்டிலும் சமனிலை (4-4) நீடித்ததால் ஆட்டம் சடன்டெத்துக்கு சென்றது.
இதில் முதல் வாய்ப்பில் இருவரும் கோல் அடித்தனர். 2-வது வாய்ப்பை வேதாந்தா அணி தவறவிட்டது. ஆனால் தமிழ்நாடு தங்களுக்குரிய வாய்ப்பில் கோல் போட்டு 6-5 என்ற கணக்கில் முதலாவது வெற்றியை ருசித்தது. இன்றைய ஆட்டங்களில் டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ் - ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் (மாலை 6 மணி), ஐதராபாத் டூபான்ஸ்- கோனாசிகா (இரவு 8.15 மணி) அணிகள் மோதுகின்றன.