ஹாக்கி உலகக்கோப்பை: வேல்சை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து...!

ஹாக்கி உலகக்கோப்பை தொடரின் 3வது ஆட்டத்தில் இங்கிலாந்து-வேல்ஸ் அணிகள் இன்று மோதின.

Update: 2023-01-13 13:52 GMT

Image Courtesy: @TheHockeyIndia

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இன்று முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும்.

முதல் நாளான இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில்அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அதைத்தொடர்ந்து மதியம் 3 மணிக்கு நடைபெற்ற 2வது ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 8-0 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து மாலை 5 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து-வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இங்கிலாந்தின் பார்க் நிக்கோலஸ் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதையடுத்து அந்த அணியின் அன்செல் லியாம் 27வது நிமிடம் மற்றும் 37வது நிமிடத்தில் கோல் அடித்து வலுவான முன்னிலை பெற காரணமாக அமைந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி மேலும் 2 கோல் அடிக்க 5-0 என்ற கணக்கில் வேல்சை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வேல்ஸ் அணி பதிலடி கொடுக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

Tags:    

மேலும் செய்திகள்