டி20 உலகக் கோப்பையில் தோல்வியடைந்த பாகிஸ்தானை கிண்டலடித்து டுவிட்டரில் பதிவிட்ட சொமேட்டோ..!
சொமேட்டோ நிறுவனம் பாகிஸ்தானை அதிகமாக வெறுப்பேற்றும் விதத்தில், டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளது.;
இஸ்லாமாபாத்,
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா கடைசி பந்தில் பரபரப்பான முறையில் 'திரில்' வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், 6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. அதன்பின்னர் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.விராட் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.விராட்டின் இந்த சிறந்த இன்னிங்ஸை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் விரல்நுனியில் இருந்த வெற்றி வாய்ப்பை தட்டிச்சென்ற கோலியை புகழ்ந்தும், பாகிஸ்தானை இன்னும் அதிகமாக வெறுப்பேற்றும் விதத்தில், இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமான சொமேட்டோ டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளது.
சொமேட்டோ தனது டுவிட்டர் பதிவில், "அன்பான பாகிஸ்தான் மக்களே! நிங்கள் தோல்வியை ஆர்டர் செய்து இருந்தீர்களா? உங்களுக்கு சேவை செய்ய விராட் உள்ளார்.." என்று கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
துபாயை சார்ந்த நிறுவனமான கரீம் பாகிஸ்தானில் பிரபலம். இதற்கு பதிலடியாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "நாங்கள் உணவு கட்டுப்பாட்டில் உள்ளோம், ஆகவே எதையும் ஆர்டர் செய்யவில்லை" என்று மறைமுகமாக தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, பெரிய நிறுவனங்கள் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் டுவிட்டரில் ஒருவரையொருவர் புண்படுத்தாமல் கேலியாக கிண்டலடித்து கொண்டது வைரலாகி வருகிறது.