தொடர் தோல்வி எதிரொலி: ரஞ்சி கிரிக்கெட்டில் களமிறங்கும் இந்திய முன்னணி வீரர்கள்
ரஞ்சி கோப்பை தொடரின் அடுத்தகட்ட லீக் சுற்று ஆட்டங்கள் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியதுடன் 10 வருடங்கள் கழித்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது.
இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தோல்விகளுக்கு இந்திய அணி பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.
னவே மூத்த வீரர்கள் உள்பட அனைவரும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தினார்.
இதனிடையே ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அடுத்தகட்ட லீக் சுற்று ஆட்டங்கள் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இதில் முன்னணி வீரர்களான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காகவும், தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காகவும் மற்றும் சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காககவும் களமிறங்க உள்ளனர்.
விராட் கோலி டெல்லி அணியின் உத்தேச பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். ஆனால் விளையாடுவது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் ரோகித் சர்மா மும்பை அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். ஆனால் விளையாடுவது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.