இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா - சாய் சுதர்சன் சதம் அடித்து அசத்தல்

இந்திய அணி 36.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

Update: 2023-07-19 20:35 GMT

image courtesy: BCCI twitter

கொழும்பு,

8 அணிகள் இடையிலான இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 48 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன் எடுத்தார். இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் 8 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் ஆடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக 2 சிக்சர் விரட்டி இலக்கை கடக்க வைத்த தமிழகத்தை சேர்ந்த தொடக்க வீரர் சாய் சுதர்சன் 104 ரன்கள் (110 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். அவருடன் கேப்டன் யாஷ் துல் (21 ரன்) களத்தில் இருந்தார். முன்னதாக அபிஷேக் ஷர்மா 20 ரன்னிலும், நிகின் ஜோஸ் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இருந்து இலங்கை, வங்காளதேசம் முதல் இரு இடங்களை பெற்று அரைஇறுதியை எட்டின. ஆப்கானிஸ்தான், ஓமன் அணிகள் வெளியேறின. 'பி' பிரிவில் இந்தியா (6 புள்ளி) முதலிடத்தையும், பாகிஸ்தான் (4 புள்ளி) 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. நேபாளம் (2 புள்ளி), ஐக்கிய அரபு அமீரகம் (0) நடையை கட்டின.

நாளை நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் இலங்கை-பாகிஸ்தான் (காலை 10 மணி), இந்தியா-வங்காளதேசம் (பிற்பகல் 2 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்