'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற வேண்டியது அவசியம்' - ரோகித் சர்மா
இந்தூரில் சாதகமான முடிவு கிடைத்து விட்டால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் குறித்து வேறுவிதமாக சிந்திக்கலாம் என்று ரோகித் சர்மா கூறினார்.
இந்தூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று இந்தூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது மகத்தான சாதனையாக இருக்கும். ஆனால் அதற்கு முதலில் இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதை அறிவோம். இந்தூரில் சாதகமான முடிவு கிடைத்து விட்டால், அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் நடக்கும் ஆமதாபாத் குறித்து வேறுவிதமாக சிந்திக்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் நடப்பதால் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப ஆமதாபாத்தின் ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் உருவாக்க நிச்சயம் சாத்தியமுள்ளது. இது குறித்து நாங்கள் ஏற்கனவே பேசி இருக்கிறோம்.
ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நெருங்கி இருக்கிறோமே தவிர இன்னும் அதை எட்டவில்லை. எனவே இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு அது குறித்து பேசலாம். அப்போது தான் சரியாக இருக்கும்.
லோகேஷ் ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். முதல் இரு டெஸ்டில் அவர் துணை கேப்டனாக இருந்தார். துணை கேப்டனில் இருந்து நீக்கப்படுவது வேறு எதையும் சுட்டிக்காட்டுவதாக அர்த்தம் கிடையாது. அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கிறது. வீரர்கள் கடினமான கட்டத்தில் இருந்து மீண்டு தங்களது திறமையை நிரூபிக்க போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்."
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.