உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் வெற்றி.!

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் வெற்றிபெற்றன.

Update: 2023-09-29 17:23 GMT

ஐதராபாத்,

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோத உள்ளனர்.

இதற்கிடையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று ஐதராபாத்தில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்த அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 103 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 346 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 97 ரன்கள் எடுத்தார். காயத்தில் இருந்து மீண்டு, மீண்டும் அணிக்கு திரும்பிய கேன் வில்லியம்சன், அரைசதம் அடித்து அசத்தினார். மேலும், டேரில் மிட்சேல், மார்க் சாப்மேன் ஆகியோரின் அரைசதத்தின் உதவியால் நியூசிலாந்து அணி 43.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.1 ஓவர்களில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 42 ஓவர்களிலேயே 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வங்காளதேச அணி தரப்பில் தன்சித் ஹசன் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த தென் ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்துசெய்யப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்