தன்னை விமர்சித்த இந்திய முன்னாள் வீரருக்கு முகமது ஷமி பதிலடி.. என்ன நடந்தது..?
ஐ.பி.எல். ஏலத்தில் ஷமி அதிக தொகைக்கு செல்ல மாட்டார் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்திருந்தார்.
மும்பை,
18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை. இதனால் அவரை ஏலத்திற்கு முன்பாக குஜராத் நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. ஆனால் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். இதனால் ஐ.பி.எல். ஏலத்தில் பல அணிகள் இவரை வாங்க மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அடிக்கடி காயத்தை சந்திக்கும் முகமது ஷமியை எந்த அணியும் பெரிய தொகைக்கு வாங்காது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.அதன் காரணமாக 2025 ஐ.பி.எல். ஏலத்தில் ஷமியின் சம்பளம் கடந்த வருடத்தை விட வெகுவாக குறையலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ஷமியை வாங்குவதற்கு கண்டிப்பாக அணிகளிடமிருந்து ஆர்வம் இருக்கும். ஆனால் ஷமி காயங்கள் சந்தித்த வரலாறு அதிகம். சமீபத்திய காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடைந்து வருவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டார். எனவே ஒரு ஐ.பி.எல். அணி அவர் மீது அதிகப்படியான தொகையை முதலீடு செய்து பின்னர் ஷமி காயத்தால் வெளியேறினால் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். அதனால் அவருடைய சம்பளத்தில் பெரிய சரிவு ஏற்படும் கவலை இருக்கிறது" என்று கூறினார்.
இந்நிலையில் மஞ்ரேக்கரின் இந்த கருத்திற்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பாபா ஜி க்கு ஜெய் ஹோ. உங்களுடைய அறிவை கொஞ்சம் உங்கள் எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்துங்கள். யாராவது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் ஐயாவை தொடர்பு கொள்ளவும்" என்று பதிவிட்டுள்ளார்.