உலகக்கோப்பை கிரிக்கெட்; வெற்றிப்பாதைக்கு திரும்புமா பாகிஸ்தான்..? - ஆப்கானிஸ்தானுடன் நாளை மோதல்..!
உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
சென்னை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில் தற்போது வரை நடைபெற்றுள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் சென்னையில் நாளை நடைப்பெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. முதல் இரு லீக் ஆட்டங்களில் வெற்றி (நெதர்லாந்து, இலங்கை) பெற்ற பாகிஸ்தான் தனது அடுத்த இரு லீக் ஆட்டங்களில் தோல்வி (இந்தியா, ஆஸ்திரேலியா) கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
அதேவேளையில் 4 ஆட்டங்களில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி (இங்கிலாந்து), 3 தோல்வி (வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்து) கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாளை நடைப்பெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்ப பாகிஸ்தான் கடுமையாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.