உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று: அயர்லாந்தை கடைசி பந்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றது.
புலவாயோ,
உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டி லீக் ஆட்டங்களில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் தகுதிச்சுற்று தொடரின் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் அயர்லாந்து -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் கேம்பர் சதமும் (120) , டாக்ரெல் (69) அரைசதமுன் அடித்தனர். ஸ்காட்லாந்து தரப்பில் பிரெண்டன் மெக்முல்லன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கிறிஸ்டோபர் 56 ரன், மேத்யூ கிராஸ் 4 ரன், அடுத்து களம் இறங்கிய மெக்முல்லன் 10 ரன், முன்சே 15 ரன், பெரிங்டன் 10 ரன், டாமஸ் 18 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் புகுந்த மைக்கேல் லீஸ்க் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து அணி தரப்பில் மைக்கேல் லீஸ்க் 91 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் மார்க் அடெய்ர் 3 விக்கெட், லிட்டில், டாக்ரெல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த தொடரில் அயர்லாந்து அணி சந்தித்த 2வது தோல்வி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.